மிக்ஜாம் புயல்: அடுத்த 7 நாட்களுக்கு மழையின் நிலவரம்!
04 Dec,2023
மிக்ஜாம் புயல் தலைநகரை புரட்டிபோட்டுள்ள நிலையில் இன்னும் ஒரு வாரத்திற்கு மிதமான மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது, இதற்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டது.
இப்புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை முற்பகல் நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே பாபட்லாவிற்கு அருகே தீவிர புயலாக கடக்கக்கூடும்.
இதன்போது மழை தீவிரமாக இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது தமிழக அரசு.
இருப்பினும் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன, எனவே மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நாளையும் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்னும் ஒரு வாரகாலத்திற்கு மிதமான மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
05.12.2023; தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
06.12.2023 மற்றும் 07.12.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
08.12.2023 முதல் 10.12.2023: வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.