77 பேர் உயிரிழந்ததாக அரசு அறிவிப்பு..
02 Dec,2023
சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் காணாமல் போன 77 பேரையும், 2 மாதங்களுக்கு நீடித்த தேடலின் முடிவில் அவர்கள் உயிரிழந்துவிட்டதாக மாநில அரசு இன்று அறிவித்துள்ளது.
அக்டோபர் 4 அன்று சிக்கிம் மாநிலத்தின் டீஸ்டா நதிப் படுகையில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக 46 பேர் பலியானார்கள். மேலும் 77 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இவ்வாறு காணாமல்போன 77 பேரும், சுமார் 2 மாதங்கள் வரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, காணாமல் போனோரை உயிரிழந்ததாக மாநில அரசு இன்று உறுதி செய்து அறிவிப்பு வெளியிட்டது.
உயிரிழந்தோர் குடும்பத்துக்கு மாநில அரசு இழப்பீட்டுத் தொகையாக ரூ.4 லட்சமும், பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ2 லட்சமும் வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. இதற்கு காணாமல் போனோர் விவகாரத்தில் உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளை சிக்கிம் கடைபிடிக்க முடிவு செய்துள்ளது. இதன்படி இறப்பு சான்றிதழ் உட்பட உரிய நடைமுறைகள் மற்றும் சரிபார்ப்புக்குப் பின்னர் இழப்பீடுகளை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
காணாமல்போனோர் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஜனவரி மாதத்திற்குள் தீர்த்து வைக்க சிக்கிம் அரசு உறுதி பூண்டுள்ளது. குடும்ப உறுப்பினரை இழந்த குடும்பங்கள் முதலில் காவல் நிலையத்தில் ’காணாமல் போனதற்கான’ புகாரை பதிவு செய்யவும், பின்னர் அந்த விவரத்தை சகல உபாயங்களில் உறுதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனிடையே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் 2 நபர்களின் சடலங்கள் அண்மையில் மீட்கப்பட்டன. ஆனால் அவை அடையாளம் காண முடியாத வகையில் சீர்குலைந்திருந்தன. எனவே அந்த சடலங்களை எவரும் உரிமை கோராததில், 77 பேர் உயிரிழந்ததாக தற்போதைய அறிவிப்பினை சிக்கிம் உறுதி செய்துள்ளது.