தனுஷ்கோடி. தலைமன்னார் தரைவழிப் பாலம், வேகமெடுக்கும் ஆய்வுகள்!
01 Dec,2023
,
இலங்கையின் தலைமன்னார் மற்றும் தமிழ்நாட்டின் தனுஷ்கோடி இடையே தரைவழிப் பாலம் கட்டுவது தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வருவதாக இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே 13 மணல் தீடைகள் உள்ளன. தனுஷ்கோடியிலிருந்து முதல் 6 ஆறு மணல் தீடைகள் இந்தியாவுக்கும், 7-லிருந்து 13-வது தீடைகள் வரை இலங்கைக்கும் சொந்தமானது. ஒவ்வொரு மணல் தீடையும் குறைந்தது 1 கி.மீ தூரம் கொண்டவை. மேலும் இந்த கடற்பகுதி ஆழம் குறைவானதும் கூட. இந்தப் பாலம் கடல் மேலும், மணல் தீடைகளிலும் அமையலாம்.
தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே கடலடியில் சுரங்கப்பாதை அமைக்கவும் முடியும். இந்தப் பாலம் மட்டும் அமைந்தால் நீண்ட கலாச்சார வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட இந்தியா - இலங்கை இடையே பயணிகள் போக்குவரத்து, சுற்றுலா மட்டுமின்றி, வர்த்தகமும் மேம்படும். கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த பாலம் குறித்த பேச்சுவார்த்தை இந்தியா- இலங்கை இடையே நடந்தது. இந்த நிலையில் பாலம் திட்டத்திற்கான ஆய்வுகள் நடைபெறுவதாக இலங்கைக்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே வடக்கு பகுதியான யாழ்ப்பாணம், தலைமன்னார் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார். யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இந்த சந்திப்புகள் குறித்து கோபால் பாக்லே செய்தியாளர்களிடம் பேசினார். "இலங்கை- இந்தியா இடையேயான எரிபொருள் குழாய் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது. இலங்கையின் வடக்கு பகுதி வழியாக திருகோணமலையை சென்றடையும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
மன்னார் மாவட்டத்தில் தலைமன்னாரில் உள்ள படகு இறங்குதுறை பகுதிகளை ஆய்வு செய்தேன். தலைமன்னார்- தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் இடையேயான கப்பல் சேவையை தொடங்குவது குறித்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும்.
தலைமன்னார்- தமிழ்நாட்டின் தனுஷ்கோடி இடையே தரைவழிப்பாலம் அமைப்பதற்கான திட்டத்தை கைவிடவில்லை. இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் சாத்தியக் கூறுகள் குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.