.
மாலத்தீவின் புதிய அதிபர் முகமது முய்சு எடுத்துள்ள ஒரு முடிவு, அவர் இந்திய எதிர்ப்பை கடைபிடிக்கிறார் என்ற கருத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
மாலத்தீவின் புதிய அதிபர் முகமது முய்சு, தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக துருக்கி சென்றுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை துருக்கி சென்றடைந்த அவர், நவம்பர் 29 ஆம் தேதி வரை அங்கிருக்கிறார். பின், COP28 மாநாட்டில் பங்கேற்க, நவம்பர் 30 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் செல்கிறார்.
இந்த மாநாட்டின்போது, அவர் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோதியையும் துபாயில் சந்திக்க வாய்ப்புள்ளது.
மாலத்தீவில் புதிதாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் அதிபர்கள், வழக்கமாக இந்தியாவுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால், தற்போது பதவியேற்றுள்ள அதிபர் முகமது முய்சு இந்தியாவிற்கு வராமல், துருக்கி சென்றுள்ளதால், அவர் மீதான இந்தியா எதிர்ப்பு பிம்பம் வலுப்பெற்றுள்ளது.
இவர், இந்த மாதம் அதிபராக பதவியேற்பதற்கு முன்னும், ஐக்கிய அரசு அமீரகத்திற்கு சென்றார். அப்போது, அபுதாபியன் நிதி மூலமாக மாலே விமான நிலையத்திட்டதிற்காக, மாலத்தீவுக்கு 80 மில்லியன் டாலர்கள் வழங்கப்படும் என உறுதி செய்யப்பட்டது.
அந்த சந்திப்பிற்கு பிறகிலிருந்து, மாலத்தீவு நிதி உதவிக்காக இந்தியாவை அதிகம் சார்ந்திருக்க வேண்டியதில்லை என நம்பப்படுகிறது.
.
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, துருக்கி அதிபர் எர்டோகனை சந்தித்துள்ளார்
மாலத்தீவின் அதிபர் முய்சு, தனது முதல் அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணத்திற்காக செளதி அரேபியாவைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறப்படகிறது. ஆனால், அந்தத் திட்டத்தினை அவர்களால் இறுதி செய்ய முடியவில்லை.
அதன்பின், துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்துவானின் அழைப்பை ஏற்று, முய்சு துருக்கி செல்ல முடிவு எடுத்துள்ளார். இந்த பயணத்திற்கு பிறகு, விரைவிலேயே அவர் செளதி அரேபியாவுக்கும் செல்வார் என கூறப்படுகிறது.
இதற்கிடையே, மாலத்தீவின் புதிய அதிபர் முகபது முய்சு, தனது முதல் பயணமாக துருக்கியை ஏன் தேர்ந்தெடுத்தார், ஏன் அங்கு சென்றார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இதற்க நிதி உதவிதான் காரணம் என்கிறார் அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷனினின் இணை ஆராய்ச்சியாளர் ஆதித்யா சிவமூர்த்தி.
அதிபரான பிறகு, முய்சு, தன்னை இந்தியா அல்லது சீனாவின் ஆதரவாளராக சர்வதேச அரங்கில் காட்ட விரும்பவில்லை என்கிறார் ஆதித்யா.
"முய்சு எந்த நாட்டுடனும் தன்னை நெருக்கமாகக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. ஏனென்றால் அதிபரான பிறகு தனது முதல் பேட்டியில், அவர் சீனா அல்லது இந்தியாவுக்கு ஆதரவானவர் அல்ல, மாலத்தீவுக்கு ஆதரவானவர் என கூறியிருந்தார். அவரது முதல் அலுவல் சார்ந்த அதிகாரப்பூர்வ சந்திப்பு பிரிட்டிஷ் உயர் அதிகாரிகளுடன் தான் நடந்தது.
முய்சு தன்னை எந்த அணியையும் சசேராதவராக காட்டிக் கொள்கிறார். பதவியேற்பதற்கு முன்பு சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்குச் சென்ற அவர், தற்போது துருக்கி சென்றுள்ளார். மாலத்தீவிற்கு பொருளாதார உதவிக்காக சீனா-இந்தியாவிற்கு பதிலாக புதிய வாய்ப்புகளை அவர் தேடுகிறார்,” என்கிறார் ஆதித்யா சிவமூர்த்தி.
அதேவேளையில், இஸ்லாமியர்களின் செல்வாக்கு முய்சுவின் அரசுக்கு இருப்பதாகவும் அவர் கூறுகிறார். “இதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். அதனால்தான், அவர் முதலில் துருக்கிக்குச் சென்றுள்ளார்,” என்றார் ஆதித்யா.
முய்சு துருக்கி அதிபர் எர்டோகனை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, ஏதேனும் உதவிகள் குறித்து துருக்கி அதிபர் மாலத்தீவின் அதிபருக்கு உறுதி கொடுத்தாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இருப்பினும், துருக்கியில், மாலத்தீவின் தூதரகத்தை திறப்பது குறித்து துருக்கி நிர்வாகத்துடன் தனது அரசாங்கம் கலந்துரையாடலை ஆரம்பிக்கும் என முய்சு கூறியுள்ளார்.
.
மாலத்தீவு முஸ்லீம் நாடுகளுடன் நெருக்கம் காட்டுகிறதா?
மாலத்தீவு, இந்தியப் பெருங்கடலில் சுமார் 1200 தீவுகளைக் கொண்ட ஒரு நாடாகும். அதன் மக்கள் தொகையில் 98 சதவீதம் பேர் சுன்னி முஸ்லீம்கள். மாலத்தீவு குடியுரிமையைப் பெற யாராவது விரும்பினால், அவர்கள் முஸ்லிமாக இருப்பது அவசியம். மாலத்தீவு ஒரு குடியரசு, அங்கு ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்டது.
2004 சுனாமிக்குப் பிறகு, மாலத்தீவில் செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. மாலத்தீவின் புனரமைப்புக்கு இந்த நாடுகள் பெரிதும் உதவின.
இந்தியா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக மாலத்தீவு வளைகுடா நாடுகளுடன் சிறந்த உறவைக் கொண்டுள்ளது. முஸ்லீம் நாடுகளுடனான உறவை மேம்படுத்த முயற்சிப்பதாகவும் முய்சு கூறி வருகிறார்.
தெற்காசிய நிபுணரும் ஆய்வாளருமான சத்தியமூர்த்தி கூறுகையில், மாலத்தீவின் பொருளாதாரம் தற்போது மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், மாலத்தீவின் பொருளாதாரம் சுற்றுலா மற்றும் மீன்வளத்தை மட்டுமே சார்ந்துள்ளதாகவும் கூறினார்.
அதற்கு இயற்கை வளங்களோ, எந்தத் தொழிலோ இல்லை, அதனால் மற்ற நாடுகளைச் சார்ந்தே இருக்கிறது என்கிறார்கள், நிபுணர்கள்.
“எந்த நாடு முய்சுவுக்கு நிதி உதவி தருவதாக உறுதியளிக்கிறதோ, அவர் அந்த நாட்டிற்கு செல்கிறார். அந்த வகையில்தான் அவர் துருக்கிக்கு சென்றிருக்கலாம்,” என்றார் சத்தியமூர்த்தி.
முஸ்லீம் நாடுகளுடன் நெருங்கி பழகுவது முதலில் உள்நாட்டிலும், இரண்டாவது சர்வதேச அளவிலும் பயனடையலாம் என்கிறார் ஆதித்ய சிவமூர்த்தி.
“உள்நாட்டு அளவில், இந்தக் கொள்கையால் மக்களை மகிழ்ச்சியடையச் செய்ய முடியும், ஏனெனில் மாலத்தீவு மக்கள், வளைகுடா நாட்டினர் தங்களின் நல்ல நண்பர்கள் என்று உணர்கிறார்கள். வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரையில், வளைகுடா நாடுகளிடம் நிறைய பணம் இருப்பதால், அவர்களிடம் இருந்து நிதி உதவியும் பெற முடியும்,” என்கிறார் ஆதித்ய சிவமூர்த்தி.
.
.
முய்சுவின் தேர்தல் பிரச்சாரம் முழுவதும் இந்தியாவே வெளியேறு என்ற பொருள்படும்படி, இந்தியாவுக்கு எதரானதாக இருந்தது. மாலத்தீவில் வெளிநாட்டு ராணுவ வீரர்களை தங்க அனுமதிக்க மாட்டோம் என தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது முய்சு அறிவித்திருந்தார்.
மாலத்தீவில், சுமார் 70 இந்திய ராணுவ வீரர்கள் தங்கியுள்ளனர். அவர்கள், இந்தியா நிறுவியுள்ள ரேடார்கள் மற்றும் விமானங்களை கண்காணித்து வருகின்றனர்.
இருப்பினும், இவ்விஷயத்தில், முய்சுவின் நிலைப்பாடு மாறியிருப்பதாகத் தெரிகிறது. முன்பு மாலத்தீவில் 100க்கும் மேற்கபட்ட வெளியாட்டு ராணுவத்தினர் இருப்பதாகக் கூறிவந்த அவர், தற்போது பதவி ஏற்றப்பிறகு, 60-70 ராணுவ வீரர்கள் இருப்பதாகக் கூறி வருகிறார்.
“அதேவேளையில், புவிசார் அரசியல் சூழ்நிலையைப் பார்த்தால், இந்தியா அல்லது சீனாவுக்கு எதிராக மாலத்தீவு செல்ல முடியாது என்று தோன்றுகிறது,” என்றார் ஆதித்யா.
“முய்சுவுக்கு முன்பே, பல மாலத்தீவு அதிபர்கள் வளைகுடா நாடுகளுக்குச் சென்று அவர்களுடன் நல்லுறவைக் கட்டியெழுப்பியுள்ளனர். ஆனால் இந்த நாடுகளால் இந்தியாவின் இடத்தைப் பிடிக்க முடியாது, ஏனென்றால் மாலத்தீவு அத்தகைய இடத்தில் உள்ளது, இதன் காரணமாக இரண்டும் ஒன்றுக்கொன்று முக்கியமானவை.
இந்தியா மீதான மாலத்தீவின் கடுமையான நிலைப்பாடு ஒரு தற்காலிக பிரச்னை. இருதரப்பு உறவுகளில் இந்தப் பிரச்சினை மிக விரைவில் தீர்க்கப்படும்,” என்றார் சத்தியமூர்த்தி.
.
மேலும், முகமது முய்சுவின் பதவியேற்பு விழாவிற்கு, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ சென்றிருந்ததாகவும், அப்போது பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என இருதரப்பும் ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும் கூறுகிறார் சத்தியமூர்த்தி.
அதேநேரத்தில், மாலத்தீவுக்கு அதிக கடன்கள் இருப்பதால், இந்த நேரத்தில் அந்தக் கடன்களை மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய சூழலில் மாலத்தீவு இருப்பதாக ஆதித்யா கூறுகிறார்.
“இந்த காரணத்திற்காக, மாலத்தீவுக்கு இந்தியா மிகவும் தேவைப்படுகிறது, எனவே அவர்களால் இந்திய அரசாங்கத்தை தனிமைப்படுத்த முடியாது. மாலே விமான நிலைய விரிவாக்கத்திற்காக 134 மில்லியன் டாலர் கூடுதல் கடனாக இந்தியாவும் அறிவித்திருந்தது. புவியியல் ரீதியாக, மாலத்தீவு இந்தியாவிற்கு மிக அருகில் உள்ளது. மேலும், அதன் பெரும்பாலான வர்த்தகம் இந்தியாவுடனோ அல்லது இந்தியா மூலமாகவோ தான் நடக்கிறது. இதனுடன் இந்தியாவுடன் பல பாதுகாப்பு ஒப்பந்தங்களையும் கொண்டுள்ளது,”என்கிறார் ஆதித்யா.
தொடர்ந்து பேசிய அவர்,“மாலத்தீவின் பெரும்பாலான மக்கள் வேலை, படிப்பு மற்றும் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வருகிறார்கள், ஏனெனில் இந்தியாதான் மிக அருகில் உள்ளது. இவை அனைத்தும் மாலத்தீவை இந்தியாவுடன் நெருக்கமாக வைத்திருக்கும் காரணிகள். மாலத்தீவுக்கான இந்தியாவின் பொருளாதார உதவி குறையலாம், ஆனால், இந்தியாவின் செல்வாக்கு குறையாது,”என்றார்.
.
யார் இந்த முகமது முய்சு?
45 வயதான முய்சு, சிவில் இன்ஜினியரிங் படித்துள்ளார். தலைநகர் மாலேயின் மேயராக இருந்துள்ளார். ஏழு ஆண்டுகள் நாட்டின் கட்டுமான அமைச்சராக இருந்தார்.
மேயராக இருந்தபோது துருக்கிக்கு சென்று வந்தார். அப்போதும் துருக்கியே அவரை அழைத்திருந்தது.
2023ல் தனது அரசாங்கம் அமைந்தால், சீனாவுடனான உறவை வலுப்படுத்துவேன் என்று ஓராண்டுக்கு முன் கூறியிருந்தார். மாலத்தீவில் சீனா அதிக அளவில் முதலீடு செய்கிறது.
அப்போது, முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனின் வழிகாட்டுதலின்படி 2023ல் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்றும், உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் சீனாவுடனான வலுவான உறவின் மற்றொரு அத்தியாயத்தை எழுதுவோம் என்றும் கூறியிருந்தார்.
முய்சு நாட்டின் எட்டாவது அதிபர் ஆவார். அவர் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனுக்கு நெருக்கமானவராகக் கருதப்படுகிறார். அவரது ஆட்சியின் போது மாலத்தீவுக்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் மிகவும் ஆழமாக இருந்தன.
கடந்த ஆண்டு டிசம்பரில், ஊழல் குற்றச்சாட்டில் அப்துல்லா யாமீனுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவருக்கு 5 மில்லியன் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது.
யாமீன் 2023 தேர்தலில் வேட்பாளராக பங்கேற்க விரும்பினார், ஆனால் கிரிமினல் வழக்கு காரணமாக அவரால் போட்டியிடமுடியவில்லை. அத்தகைய சூழ்நிலையில் அவர் முய்சுவை தனது பினாமியாக களமிறக்கினார் என்று நம்பப்படுகிறது.