அமெரிக்காவில் இந்திய தூதர் மீது காலிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல்
28 Nov,2023
¨¨
நியூயார்க்: சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக்கின் பிறந்த நாள் சீக்கியர்களால் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண்ஜித் சிங் சாந்து நியூயார்க்கின் நெடுந்தீவில் (லாங் ஐலேண்ட்) உள்ள குருத்வாராவில் வழிபட சென்றார்.
அப்போது அங்கு கூடியிருந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் அவரை திடீரென தாக்கினர். மேலும், கனடாவில் கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொல்லப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர். பின்னர், குருத்வாராவில் இருந்த சீக்கிய சமூகத்தினர் சாந்துவை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக சாந்து தனது எக்ஸ் பதிவில், குருநானக் தர்பாரில் ஒற்றுமை, சகோதரத்துவம் குறித்த என்றும் அழியாத அவரது பேச்சுகளை கேட்டேன். சமத்துவ விருந்தில் பங்கேற்றேன். அனைவருக்காகவும் வேண்டி கொண்டேன். ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த சீக்கியர்கள் உள்பட அனைத்து சீக்கிய சகோதரர்களுடனும் இருந்தது மகிழ்ச்சியாக உள்ளது, என்று கூறியுள்ளார்.