வானத்தில் பறந்த மர்ம பொருள் இம்பால் ஏர்போர்ட் மூடல்: 3 விமானங்கள் தாமதம்; 2 திருப்பி விடப்பட்டன
20 Nov,2023
வானத்தில் பறந்த மர்ம பொருளை கண்டுபிடிக்க இம்பால் ஏர்போர்ட் 3 மணி நேரம் மூடப்பட்டு இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூர் மாநிலம் இம்பால் விமான நிலையம் அருகே அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் காணப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணியளவில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருளை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அலுவலகத்தில் இருந்தவர்கள் பார்த்தனர். இதையடுத்து விமானநிலைய அதிகாரிகள் உடனடியாக கட்டுப்படுத்தப்பட்ட வான்வெளியில் விமானப்போக்குவரத்து அதிரடியாக ரத்து செய்து, வான்வெளி மூடப்பட்டதாக அறிவித்தனர். இதனால் புறப்படத்தயாராக இருந்த 3 விமானங்கள் பயணிகளுடன் அப்படியே நிறுத்தப்பட்டன. மேலும் தரையிறங்க வேண்டிய 2 விமானங்கள் கொல்கத்தா மற்றும் கவுகாத்தி நோக்கி திருப்பி விடப்பட்டன.
இதையடுத்து வான்வெளி கட்டுப்பாட்டை இந்திய விமானப்படை வசம் ஒப்படைத்தனர். அருகில் இருந்த தளத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான ரபேல் விமானங்கள் விரைந்து வந்து இம்பால் விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வாக பறந்து சோதனை நடத்தின. ஆனால் எந்தவித மர்ம பொருளும் தென்படவில்லை. இதையடுத்து 3 மணி நேர தாமதத்திற்கு பின்னர் மாலை 6.15 மணி அளவில் விமானங்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டன. இதுபற்றி இம்பால் விமான நிலைய இயக்குனர் சிபெம்மி கெய்ஷிங் கூறுகையில்,’ இம்பால் விமான தளம் பகுதியில் டிரோன் பறந்ததால் உடனடியாக விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது’ என்றார்.