சுரங்கப் பாதை மீட்புப் பணி 4வது நாளை எட்டியது; 40 பேரில் 2 பேரின் உடல்நிலை பாதிப்பு
15 Nov,2023
உத்தரகாசி: உத்தரகாண்ட் சுரங்கப் பாதை மீட்புப் பணி 4வது நாளை எட்டிய நிலையில் உள்ளே இருக்கும் 40 பேரில் 2 பேரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு தேவையான மருந்துகள் கம்ப்ரசர் பைப் மூலம் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் அமைந்துள்ள சில்க்யாரா-பர்கோட் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். இந்த விபத்து நடந்து 4 நாட்கள் ஆகிறது. ஆனால் மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு உணவு, தண்ணீர், ஆக்சிஜன் உள்ளிட்ட பொருட்கள் பைப் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன. அவர்களுடன் தொடர்பில் இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த நிலையில் சுரங்கப்பாதையில் சிக்கிய 40 தொழிலாளர்களில் 2 பேரின் உடல்நிலை நேற்று திடீரென மோசமடைந்தது. இதில் ஒருவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாகவும், மற்றொருவருக்கு தலைவலி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
அதையடுத்து அவர்களுக்கு தேவையான மருத்து, மாத்திரைகள் பைப் கம்ப்ரசர் மூலம் மீட்புக் குழுவினர் அனுப்பி வைத்தனர். மீட்புப் பணிகள் நடைபெறும் சுரங்கப்பாதை பகுதிக்கு வெளிநபர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. இருந்தும் நேற்று முதல் உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு உரிய ஆறுதல்களை அதிகாரிகள் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து மீட்புக் குழு அதிகாரிகள் கூறுகையில், ‘சுரங்கப்பாதையில் 5 முதல் 6 நாட்கள் உயிர்வாழ்வதற்காக ஆக்ஸிஜன் வசதி உள்ளது. ரேடியோ கருவி மூலம் உள்ளே இருக்கும் தொழிலாளர்களுடன் பேசினோம். சுரங்கப்பாதையில் துளையிடுவதற்கான பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் உடனடியாக சுரங்கப்பாதை அருகே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்றுக்குள் சுரங்கப்பாதையில் சிக்கியிருக்கும் 40 பேரையும் மீட்பதற்கான வாய்ப்புகள் உள்ளன’ என்றனர்.