அமெரிக்காவில் இந்திய மாணவர் கொலை - வாக்குமூலத்தில் கொலையாளி சொன்ன ‘விசித்திர’ காரணம்
09 Nov,2023
இண்டியானா: அமெரிக்காவில் 24 வயது இந்திய மாணவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளி சொன்ன கொலைக்கான காரணத்தால் போலீஸார் திகைத்துப் போயுள்ளனர்.
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வருண் ராஜ் புச்சா. இவர் கடந்த 2022 ஆக்ஸ்டில் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். வால்பரைஸோ பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பயின்றுவந்த மாணவர் கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், அவர் இன்று (நவ.9) சிகிச்சைப் பலனின்றி இறந்தார். அவருடைய மறைவுச் செய்தி அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடந்தது என்ன? - வருண் ராஜா கடந்த 29-ஆம் தேதி உடற்பயிற்சி மையத்துக்கு சென்றிருந்தார். அங்கு வந்திருந்த ஜோர்டன் ஆண்ட்ரேட் என்ற சக வயது மாணவர் புச்சுவை கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த வருண் ராஜா புச்சு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவத்தில் ஜோர்டன் கைது செய்யப்பட்டார்.
விசித்திரமான காரணம்: ஜோர்டனிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், "நான் சம்பவத்தன்று காலை உடற்பயிற்சிக் கூடத்தின் மசாஜ் அறைக்குச் சென்றேன். அங்கே வரும் இருந்தார். அவரைப் பார்த்தபோது விசித்திரமாக இருந்தார். அவரால் எனக்கு ஆபத்து எனத் தோன்றியது. அதனால்நான் அவரை கத்தியால் குத்தினேன்" என்றார். காவல் துறையினர் எங்கே குத்தினீர்கள் எனக் கேட்க அவரோ, "நான் கத்தியை இறக்கினேன். அது அவர் தலையில் பாய்ந்தது" என்றார். அவர் சொன்ன விசித்திரமான காரணமும், அவர் கொலையை செய்த முறையும் போலீஸாரையே அதிரவைத்தது.
இந்நிலையில், வருண் பயின்ற பல்கலைக்கழகத்தில் வரும் நவம்பர் 16-ஆம் தேதி நினைவேந்தல் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. "வருணின் நினைவேந்தல் கூட்டத்தை கனத்த இதயங்களோடு நடத்தவுள்ளோம். வருணின் குடும்பத்தாருக்காக பிரார்த்தனை செய்கிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.