எலான் மஸ்கின் மகன் பெயர் சந்திரசேகர்.. மத்திய அமைச்சர் வெளியிட்ட ஆச்சரிய தகவல்!
03 Nov,2023
.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர், டெஸ்லா சிஇஓ மற்றும் ட்விட்டர் சமூக வலைதளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் தனது மகனுக்கு சந்திரசேகர் என்று பெயரிட்டுள்ள தகவல் ஆச்சர்யத்தை உருவாக்கியுள்ளது.
மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இங்கிலாந்தில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் சமீபத்தில் பங்கேற்றார். அப்போது அவர் உலகின் நம்பர் 1 கோடீஸ்வர தொழிலதிபரும், டெஸ்லா உரிமையாளருமான எலான் மஸ்க்கை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, மத்திய அமைச்சர் சந்திரசேகர் தனக்கும் எலான் மஸ்க்கிற்கும் இடையே நடந்த உரையாடல் என்ன என்பதை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
அதில், எலான் மஸ்க்கின் மகனின் முழுப் பெயர் ஷிவோன் சந்திரசேகர் ஜிலிஸ் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க் இந்திய விஞ்ஞானியும் நோபல் பரிசு பெற்றவருமான பேராசிரியர் எஸ் சந்திரசேகரால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். எனவே அவரின் நினைவாக தனது மகனின் பெயரின் நடுவில் சந்திரசேகர் என்ற பெயரை எலான் மஸ்க் வைத்துள்ளார். இதனை மஸ்க்கே கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விஞ்ஞானி சந்திரசேகர் 1983ல் நோபல் பரிசு பெற்றார்.
உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் சர்ச்சைகளுக்கு சொந்தக்காரராக உள்ளார். அவர் கடந்த ஆண்டு விலைக்கு வாங்கிய ட்விட்டரில் அதிரடி மாற்றங்களை செய்து அடிக்கடி தலைப்பு செய்திகளில் இடம்பிடிப்பவர். விக்கிபீடியா பக்கத்தில் இவருக்கு 11 குழந்தைகள் உள்ளதாக தகவல் பதிவாகியுள்ளது.