இந்தியா சுதந்திரம் பெற்றபோது, 562 மன்னர்கள் நாட்டின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் கிட்டத்தட்ட பாதியையும், அதன் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியையும் ஆட்சி செய்தனர்.
விசித்திரமான அரண்மனைகளில் வாழ்ந்த அவர்கள், வைரங்கள், விலையுயர்ந்த ரத்தினங்கள் என எண்ணிலடங்கா சொத்துகளைக் குவித்து வைத்திருந்தார்கள்.
ரோல்ஸ் ராய்ஸ் போன்ற உலகின் விலை உயர்ந்த கார்களை பயன்படுத்தினார்கள், பிரத்யேகமான ரயில் பெட்டிகளில் பயணம் செய்தார்கள்.
அவர்கள் டெல்லியை வந்தடைந்தபோது, இடி முழக்கம் போன்ற துப்பாக்கி சத்தத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவர்களால் தங்கள் குடிமக்களைச் செழிப்பாக வாழ வைக்கவும் முடியும், அவர்களது வாழ்வையே அழிக்கவும் முடியும். அதிகாரம் அந்த அளவுக்கு அவர்கள் கையில் இருந்தது.
விளம்பரம்
அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே லட்சக்கணக்கான பொதுமக்கள் கடுமையாக உழைக்கும் நிலை நிலவியது.
ஆனால், இவை அனைத்துமே 1947இல் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகஸ
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததும் கிட்டத்தட்ட கடவுள்களைப் போல் தங்கள் குடிமக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வந்த மன்னர்களின் அதிகாரங்களும் பறிபோயின.
அது எப்படி நடந்தது? இங்கு விரிவாகப் பார்ப்போம்ஸ
இந்திய மன்னர்களை ஏமாற்றிய பிரிட்டிஷ் அதிகாரிகள்
சுதந்திரத்திற்கு முன்னதாக, இந்தியாவின் 562 மன்னர்கள் அதன் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட பாதியை ஆக்கிரமித்து அதன் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியை ஆட்சி செய்தனர்.
பிரிட்டனின் மிகவும் விசுவாசமான கூட்டாளிகளாக இருந்த அவர்களில் மிகக் கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மட்டுமே அதுவும் மிகவும் அரிதாகவே மன்னர் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர்.
எது எப்படி இருந்திருந்தாலும், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், அவர்களில் பெரும் பணக்காரர்கள், அரசியல் ரீதியாகத் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள் தற்போது ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
நான் எனது புதிய நூலை எழுத ஆராய்ச்சி செய்ததைப் போல், சுதந்திரம் மற்றும் அதன் பின்விளைவுகளுக்கு வழிவகுத்த கொந்தளிப்பான நிகழ்வுகளை உன்னிப்பாகப் பார்க்கும்போது, கொடிய முறையில் குழி பறிக்கப்பட்ட மன்னர்கள், அவர்கள் மிகவும் நம்பிய சக்தியால் ஏமாற்றப்பட்டனர் என்பது தெளிவாகிறது.
ஆட்சியாளர்கள் தங்கள் நாடுகளைக் காப்பாற்றிக் கொள்ளவும், சுதந்திரமான மற்றும் ஜனநாயக இந்தியாவுடன் இணைந்து வாழவும், தாங்களாகவே அந்த ஜனநாயகத்தை ஏற்றுக் கொள்வதே சிறந்த வாய்ப்பு.
இருப்பினும், பிரிட்டிஷ் அதிகாரிகள், அந்த மன்னர்களுக்குத் தவறான பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்திவிட்டு, அத்தகைய சீர்திருத்தங்களுக்காக கடுமையாக அழுத்தம் கொடுத்தனர்.
குவாலியர் மன்னரின் வாரிசு மறைந்த மாதவராவ் சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இணைந்து பல்வேறு உயர் பொறுப்புக்களை வகித்தார்.
மவுண்ட் பேட்டன் கடைசி வைஸ்ராய் ஆனபோது, மன்னர்கள், அவர்களைக் காக்க ஒரு சரியான பிரபு வந்துவிட்டதாக நினைத்தனர்.
நிச்சயமாக, அவரைப் போன்ற ஒரு பிரபு அவர்களை ‘தேசியவாத ஓநாய்களிடமிருந்து காக்க மாட்டாரா’ என எதிர்பார்த்தனர்.
இருப்பினும், மவுண்ட் பேட்டன் இந்திய துணைக்கண்டத்தைப் பற்றி மட்டுமே சிந்தித்தாரே ஒழிய மன்னர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்த நாடுகளைப் பற்றி என்ன முடிவுகளை எட்டுவது என்பதை இந்திய அரசிடமே மிகவும் தாமதமாக விட்டுவிட்டார். ஆனால் அதே நேரம், அவர் மாறுபட்ட செய்திகளையும் அனுப்பினார்.
பிரிட்டன் ஒருபோதும் இந்திய அரசுடனான தனது ஒப்பந்தங்களை மீறாது என்றும், அந்த மன்னர்கள் இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ இணைய யாரையும் கட்டாயப்படுத்தப் போவதில்லை என்றும் உறுதியாகத் தெரிவித்துவிட்டார்.
அதே நேரத்தில் லண்டனில் இருந்த இந்திய அலுவலக அதிகாரிகளின் முடிவுகளுக்குப் பின்னால் அவர் எந்த முடிவையும் எடுக்கத் தயங்கவில்லை. இந்த மன்னர்கள் குறித்து வேறுசில முடிவுகளை எட்டவும் அவர் முயன்றார்.
தேசியவாதிகள் ஒருபோதும் மன்னர்களை ஏற்றுக் கொள்பவர்களாக இருக்கவில்லை. குறிப்பாக, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக வரவிருந்த ஜவஹர்லால் நேரு, “கட்டுப்பாடுகள் அற்ற அதிகாரங்களைக் கொண்டிருந்த அதுபோன்ற மன்னர்கள் தொடர்ந்து செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். சில மன்னர்கள், ‘மக்கள் மீது அக்கறை இல்லாத கொடூர புத்தி கொண்டவர்கள்’ என்றும் அவர் அப்போது கருதினார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் அமைச்சராக இருந்த வல்லபாய் படேல், இந்த மன்னர்களை சரியாகக் கையாள இறுதி வரை முயன்றார்.
ஆனால் பிராந்திய ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இந்தியா வல்லமை மிக்க நாடாக இருக்க வேண்டும் என்றால் சமஸ்தானங்கள் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார்.
இடார் மன்னர் பகீரத் சிங் 1948ம் ஆண்டு அவர் வாங்கிய காருடன் 2002-ம் ஆண்டு பழங்கால கார்களின் கண்காட்சியில் பங்கேற்றார்.
முரண்டுபிடித்த ஹைதராபாத் சமஸ்தானம்
இந்திய சமஸ்தானங்களை ஆட்சி செய்த மன்னர்கள், இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைவது அல்லது பிரிட்டனின் ஆளுகையிலிருந்து வெளியேறிய உடன் அவர்களின் சுதந்திரத்தை அறிவிப்பது என எதை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம் என்றே கோட்பாட்டின் அடிப்படையில் பார்க்கப்பட்டது. ஆனால் நடைமுறை வேறு விதமாக இருந்தது.
ஆனால், மவுண்ட் பேட்டனால் ஒருங்கிணைந்த இந்தியா உருவாக்கப்பட்ட பிறகு, படேலும், அவருடன் பணியாற்றிய தலைசிறந்த ராஜதந்திரியான வி.பி.மேனனும் இந்தியாவின் அதிகார எல்லை சுருங்குவதைக் கண்டனர்.
எனவே, “இந்தியாவுடன் சேருங்கள், உங்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும். பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் தகவல் தொடர்பு ஆகிய மூன்று துறைகளைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் நீங்களே அதிகாரம் செலுத்திக்கொள்ளலாம்.
உங்கள் உள்விவகாரங்களில் நாங்கள் தலையிட மாட்டோம். இல்லையெனில் உங்களைத் தூக்கி எறிந்துவிட்டு உங்கள் நாடுகளை நாங்கள் எடுத்துக்கொள்வோம். யாரும் உங்களுக்கு உதவ வரமாட்டார்கள்,” என சமஸ்தானங்களுக்கு அழுத்தம் கொடுத்தனர்.
அப்போது எந்த உதவியும் இன்றித் தவித்த பெரும்பாலான மன்னர்கள் இந்திய அரசின் உடன்படிக்கையில் கையெழுத்திட்டு, இந்தியாவுடன் இணைந்துகொண்டனர். ஆனால், ஜூனாகத், காஷ்மீர், ஹைதராபாத் சமஸ்தானங்கள் மட்டும் முரண்டுபிடித்தன.
இருப்பினும் இறுதியில் போர்ச்சூழலில் சிக்கித் தவித்த காஷ்மீரின் ஒரு பகுதி இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. மேலும் ஹைதராபாத் துப்பாக்கிமுனையில் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அதேபோல் ஜுனாகத் சமஸ்தானமும் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
ஹைதராபாத்தை இணைக்கும் நடவடிக்கை ‘போலீஸ் ஆக்ஷன்’ என பெயரிடப்பட்டது. அதில், சுமார் 25 ஆயிரம் பேர் உயிரிழந்த பிறகே இந்தியாவுடன் இணைந்தது.
சைக்கிளில் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்ட மன்னர்கள்
இந்திய அரசுடன் உடன்படிக்கை மேற்கொண்ட மன்னர்களுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் விரைவில் தூக்கி எறியப்பட்டன.
சிறிய நிலப்பகுதிகள் ஒடிசா போன்ற தற்போதைய மாநிலங்களுடனோ, அல்லது புதிதாக நிறுவப்பட்ட ராஜஸ்தான் போன்ற மாநிலங்களின் ஒன்றியங்களுடனோ இணைக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
குவாலியர், மைசூர், ஜோத்பூர், ஜெய்ப்பூர் போன்ற பெரிய, சிறந்த ஆட்சியின் கீழ் இருந்த நிலங்களுக்குக்கூட, படேலும், மேனனும் தன்னாட்சி அதிகாரம் தொடர்ந்து அளிக்கப்படும் என உறுதியளித்திருந்தனர். ஆனால் அவையும் மீறப்பட்டு, தற்போதைய இந்தியா இருப்பதைப் போலவே மிகப்பெரிய நாடாகக் கட்டமைக்கப்பட்டது.
இந்தியாவை இப்படி ஒருங்கிணைத்தது அந்த முயற்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒரு லாபகரமான நடவடிக்கை என்பதில் சந்தேகமில்லை.
பிரிவினை மற்றும் பாகிஸ்தான் என்ற தனிநாடு உருவானதன் காரணமாக இழந்த நிலப்பரப்பு மற்றும் மக்கள் தொகையை மீண்டும் இந்த ஒருங்கிணைப்பு மூலம் இந்தியா பெற்றது என்றே சொல்ல வேண்டும். அத்துடன் கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாய் பணம் மற்றும் முதலீடுகளும் இந்தியாவுக்குக் கிடைத்தன.
இதற்குப் பதிலாக முன்னாள் மன்னர்களில் பாதி பேருக்கு வரியில்லா ‘வருமானங்கள்’ வழங்கப்பட்டன. அவை மைசூர் மன்னருக்கு ஆண்டுக்கு 20,000 பவுண்டுகள் என்றும், கட்டோடியாவுக்கு 40 ஆயிரம் பவுண்டுகள் என்றும் நிர்ணயிக்கப்பட்டன. ஆனால், அந்தப் பணத்தை மிச்சபடுத்துவதற்காக கட்டோடியா, ஒரு எழுத்தராகப் பணிபுரிந்தது மட்டுமல்லாமல் எப்போதும் சைக்கிளில் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டார்.
இந்த ஏற்பாடு இருபது ஆண்டுகளுக்கு மட்டுமே நீடித்தது. அரச குடும்பங்களைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் அரசியலில் நுழைந்தனர். நேருவின் மகள் இந்திரா தலைமையில் செயல்பட்ட காங்கிரஸ் கட்சியில் சிலர் இணைந்தனர்.
ஆனால் பெரும்பாலானவர்கள் எதிர்க்கட்சிகளில் ஐக்கியமாகினர். இந்திரா காந்தியும் அவரது தந்தையைப் போலவே, மன்னர்களை வெறுத்தார்.
மேலும் மன்னர்களை அரியணையில் இருந்து அகற்றி அவர்களை காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களாக மாற்றுவதில் அவர் பெருமுனைப்பு காட்டினார்.
அத்தகைய நடவடிக்கை தனது எதிர்கால அரசியலுக்கு பெரிய அளவில் உதவும் எனக் கருதிய அவர் மன்னர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய இணக்கமான குடியரசுத் தலைவரைப் பெற முயன்றார். ஆனால், அவரது அந்த கனவு உச்சநீதிமன்றத்தால் தகர்க்கப்பட்டது.
அதுபோல் மன்னர்களை அகற்றும் உத்தரவுகளை வெளியிடுவதற்கு குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.
1971 தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்துக்கு சென்ற இந்திரா காந்தி, அரசமைப்பு சட்டத்தை வெற்றிகரமாகத் திருத்தி, மன்னர் பட்டங்கள், சலுகைகள் மற்றும் தனியுரிமை பயணச் சலுகைகளை அகற்ற ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தினார்.
அவரைப் பொறுத்தவரையில், “தற்கால சமூகத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லாத ஓர் அமைப்பை” முடிவுக்குக் கொண்டு வரவேண்டிய நேரம் வந்துவிட்டது என்றே நினைத்தார்.
சில இந்தியர்களே, சமஸ்தானங்களின் மறைவைக் கண்டு மனவேதனையில் மூழ்கினர். அதுமட்டுமின்றி முன்னாள் தர்பார் அரங்குகளில் இருந்து வெளிப்படும் துரோகத்தின் அழுகைகள் இன்றைய உலகைப் பொறுத்தவரை வெற்றுத்தனமாக உள்ளன.
பிரிட்டனை போலல்லாமல், இந்தியாவின் ஜனநாயகத்தில் மன்னராட்சிக்கு இடமில்லை. ஆயினும்கூட, இந்த நோக்கத்திற்கான வழிமுறைகள் பெரும்பாலும் பலரால் பலவிதமாகத் திரிக்கப்பட்டன.
மன்னர்களுக்கு நியாய விரோதமாக வழங்கப்பட்டு வந்த சலுகைகள் அனைத்தும் இந்திரா காந்தியின் அந்த அதிரடி நடவடிக்கைகளின் மூலமாக முடிவுக்கு வந்தன. ஆனால் அவரது நடவடிக்கையைப் பலர் மிக மோசமான நடவடிக்கை என விமர்சித்தனர்.
கட்டுரை தகவல்
எழுதியவர், ஜான் ஸுப்ரிசிக்கி