அமெரிக்காவில் ஒராண்டில் சட்டவிரோதமாக நுழைந்த 42,000 இந்தியர்கள்.,அதிர்ச்சி தகவல்!
31 Oct,2023
.
அமெரிக்காவில் கடந்த ஓராண்டில் மட்டும் 42,000 இந்தியர்கள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் சட்டவிரோத நுழைவு தொடர்பாக நியூ யார்க்கின் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற பத்திரிகை நிறுவனம் வெளியிடுள்ள தரவுச் செய்தியில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தத் தரவுகளின்படி, அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்த இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த நிதியாண்டை விட இந்த நிதியாண்டில் இரு மடங்கு அதிகரித்துள்ளது.
இதில், பெரும்பாலானோர் புகலிடம் தேடி அமெரிக்காவுக்கு வருவதாகவும், இதற்கு முன்பு அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்து வேலை செய்து வருவோரின் தூண்டுதலின்பேரில் அதேபோன்று நுழைந்து வேலைவாய்ப்புகளைப் பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எல்லையைக் கடந்து நுழைய வெளிநாட்டுப் பயண முகவர்களும், போதைப்பொருள் கடத்துபவர்களும் குறிப்பிட்டத் தொகையை பெற்றுக்கொண்டு உதவுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 அக்டோபர் மாதம் வரையில், சர்வதேச அளவில் எல்லையைக் கடந்து சட்டவிரோதமாக நுழைந்ததாக 2 மில்லியன் மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தரவுகள் தெரிவிக்கின்றன.