விசா சேவை..இந்தியாவின் முடிவுக்கு கனடா வரவேற்பு!
27 Oct,2023
.
கனடா - இந்தியா இடையிலான மோதல் போக்கு முற்றி வந்த நிலையில், ரத்தான விசா சேவையை மீண்டும் இந்தியா தொடங்கியதன் மூலம் இருநாட்டு உறவுக்கு புத்துயிர் கிடைத்திருக்கிறது.
இந்தியா - கனடா இடையேயான உறவில் கடந்த சில மாதங்களாகவே மோதல் போக்கு தொடர்ந்து வந்தது. கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு பின்னணியில் இந்திய உளவு ஏஜெண்டுகள் இருப்பதாக கனடா நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக குற்றம்சாட்டினார் கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ.
.
ஹர்தீப் சிங் கொலை பின்னணியில் இந்தியா இருப்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகவும் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். இதுதொடர்பாக உலக நாடுகளின் ஆதரவையும் அவர் கோரினார். கனடா பிரதமரின் இந்த நடவடிக்கைகளால் இருநாட்டு உறவில் கசப்பு விளைந்தது. இதையடுத்து கனடாவில் இருந்த இந்திய தூதரை அந்நாட்டு அரசு வெளியேற்றியது. இதற்கு பதிலடியாக கனடா தூதர்களை வெளியேற இந்தியா உத்தரவிட்டது.
கனடாவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரித்த இந்தியா, இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகரிகளின் எண்ணிக்கையை குறைக்குமாறும் உத்தரவிட்டது. இதையடுத்து தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றது கனடா. இந்த மோதல் காரணமாக கடந்த மாதம் 21ம் தேதி முதல் கனடாவுக்கான விசா சேவையை இந்தியா நிறுத்தி வைத்தது. பாதுகாப்பு காரணங்களால் விசா சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக கனடாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்தது.
இதனால் கனடாவில் இருந்து இந்தியர்கள் தாய்நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் மீண்டும் விசா வழங்கும் சேவையை தொடங்க வேண்டும் என்று கனடா அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து மருத்துவ விசா, பிசினஸ் விசா, என்ட்ரி விசா, கான்பரன்ஸ் விசா என 4 விசா சேவைகள் நேற்று தொடங்கப்பட்டன.
.
இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு கனடா வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கனடா அமைச்சரான மார்க் மில்லர், “இந்தியாவின் இந்த நடவடிக்கை ஒரு நல்ல அறிகுறி. முன்னதாக இந்தியாவுடனான தூதரக உறவு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது” என்று தெரிவித்துள்ளார். விசா சேவையில் இந்தியாவின் புதிய மாற்றம், இந்தியர்கள் நாடு திரும்புவதற்கான ஏற்பாடா அல்லது கனடாவுடனான பூசலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடா அல்லது இவை இரண்டுமா என்பது விரைவில் தெரிய வரும்.