இந்தியர்களுக்கான கனடா விசா இனி இழுபறியாகும்!
20 Oct,2023
அதிகாரிகளை அதிக எண்ணிக்கையில் கனடா திரும்பப் பெற்றதால், கனடாவுக்கு விசா கோரிய இந்தியர்களுக்கு அவை கிடைப்பதில் இழுபறியாகும் சூழல் எழுந்துள்ளது.
முன்னெப்போதும் இல்லாத வகையில் கனடா - இந்தியா இடையிலான இரு நாட்டு உறவு விரிசல் கண்டு வருகிறது. காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் கனடாவில் சில மாதங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வெடித்த சர்ச்சை வேகமாக வளர்ந்து வருகிறது.
இருநாடுகளும் பரஸ்பரம் தூதரக அதிகாரிகளை திரும்பப்பெற்றன. அதன் உச்சமாக தூதரக அதிகாரிகளில் 41 பேரை கனடா திரும்பப்பெறுவதாக இன்று அறிவித்தது. இந்தியா அளித்த அழுத்தமே இதற்கு காரணம் என்றும் கனடா தெரிவித்தது. இதனால் கனடாவுக்கான விசா கோரும் பணிகள், அதன் இந்திய தூதரங்களால் தேக்கமடையும் சூழல் எழுந்துள்ளது.
கனடாவில் உயர்கல்வி பயில்வது என்பது வட இந்தியாவில் பரவலாக காணப்படுகிறது. இதற்கான நடைமுறைகளில் இனி இழுபறி நீடிக்கக்கூடும். விசா கோரி விண்ணப்பித்தவர்களுக்கு அவை கிடைப்பதில் தாமதமும் ஏற்படும்.
இவற்றோடு, கனடாவில் இந்தியர்கள் மற்றும் இந்தியாவில் கனேடியர்கள் என, இருநாட்டு குடிமக்களும் பாதுகாப்பாக இருக்குமாறு தங்கள் தூதரகங்கள் வாயிலாக இரு நாடுகளும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்தியா கடந்த மாதம் இந்த அறிவுறுத்தலை வழங்கியதை அடுத்து, இந்தியாவில் இருக்கும் தனது குடிமக்களுக்கு இன்று கனடா அறிவுறுத்தல் வழங்கியது. இந்த வகையில் விசா கிடைப்பதில் தாமதம் மட்டுமன்றி, கனடாவுக்கு இந்தியர்கள் பயணப்படுவதை பரிசீலிக்கும் நிலைக்கும் ஆளாகியுள்ளனர்.