நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை வரையிலான கப்பல் போக்குவரத்து 40 ஆண்டுகளுக்குப் பின் கடந்த அக்டோபர் 14ஆம் தேதியன்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.
ஆனால், ஒரே வாரத்தில் பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கப்பலில் பயணிகள் பயணிக்க ஆர்வம் இல்லாதது கப்பல் சேவையை நிறுத்தக் காரணமா?
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த அக்டோபர் 14ஆம் தேதி மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிப் போக்குவரத்து மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் துவங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோதி காணொளி காட்சி வாயிலாக பங்கேற்று “இந்த கப்பல் போக்குவரத்து இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்,” எனப் பேசினார்.
கப்பலில் பயணிக்க கட்டணம் எவ்வளவு?
நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு இடையிலான 60 கடல் கடல் தொலைவை இந்த கப்பல் 3 முதல் 4 மணிநேரத்தில் கடக்கும். அதில், 150 பயணிகள் அமர்ந்து பயணிக்கும் அளவுக்கு இதில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தக் கப்பலில் பயணிக்க 6,500 ரூபாய் கட்டணம் 18% ஜி.எஸ்.டி வரியுடன் சேர்த்து 7,670 ரூபாய் வசூல் செய்யப்பட்டும் என அறிவக்கப்பட்டது.
நாகையில் இருந்து காலையில் புறப்பட்டு நண்பகல் வேளையில் இலங்கையைச் சென்றடையும். பிறகு பிற்பகலில் இலங்கையின் காங்கேசன்ட் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு நாகையை வந்தடையும்.
இந்த கப்பலில் பயணிக்க விமானத்தில் பயணிக்கத் தேவைப்படுவது போல விசா கட்டாயம் பெறவேண்டும். அதேபோல் 50 கிலோ எடையை மட்டுமே பயணிகள் தங்களுடன் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மூன்று நாட்களாக மாற்றப்பட்ட கப்பல் சேவை
நாகைக்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் சேவை போதிய பயணிகள் டிக்கெட் முன்பதிவு இல்லததால் தொடங்கிய நாளில் 60% வரை டிக்கெட் சலுகை அளிக்கப்பட்டது.
ஆனால், கப்பல் சேவை தொடங்கியதற்கு அடுத்த நாள் அக்டோபர் 15ஆம் தேதி கப்பலில் பயணம் செய்ய வெறும் 7 பேர் மட்டுமே முன்பதிவு செய்திருந்தனர். இதனால் அன்று கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து அக்டோபர் 16ஆம் தேதியில் இருந்து வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே கப்பல் போக்குவரத்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து நிறுத்தம்
இந்நிலையில் அக்டோபர் 20ஆம் தேதி முதல் நாகை – இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு இடையிலான கப்பல் போக்குவரத்து நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியது.
பயணிகளிடம் கப்பலில் இலங்கை செல்ல ஆர்வம் குறைவாக இருப்பதால் பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியது.
பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடக்கப்படுமா?
இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து இத குறித்து கப்பல் போக்குவரத்துத் துறை அதிகாரியைத் தொடர்புகொண்டு பேசினோம்.
அவர், “நாகப்பட்டினம், இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து பயணிகள் எண்ணிக்கை குறைவு என்பதால் நிறுத்தப்படவில்லை.
அடுத்த இரண்டு மாதத்திற்கு இலங்கை, இந்தியாவை ஒட்டியுள்ள கடல் பகுதியில் சூறைக் காற்றுடன் கடல் கொந்தளிப்பாக இருக்கும்.
அந்த மோசமான வானிலையின்போது கடலில் பயணிகளை அழைத்துச் செல்வது பாதுகாப்பானதாக இருக்காது. இதனால் இந்தக் கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
இந்தக் கப்பல் போக்குவரத்து கடல் சீரான பிறகு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் இயக்கப்படும்,” என பிபிசியிடம் தெரிவித்தார்.
இலங்கைக்கு பயணித்த பயணிகள் எண்ணிக்கை எவ்வளவு?
நாகப்பட்டினம், இலங்கை இடையிலான பயணிகள் போக்குவரத்து அக்டோபர் 20ஆம் தேதியுடன் நிறுத்தப்படுகிறது.
கடந்த 7 நாட்களில் மட்டும் எவ்வளவு பேர் பயணித்தார்கள் என்பது குறித்து டிக்கெட் விற்பனை செய்த ஏஜெண்ட் நிறுவனத்திடம் கேட்டபோது, “இந்த கப்பலில் எவ்வளவு பேர் பயணித்துள்ளார்கள் என்பது குறித்து தற்போது தெரிவிக்க இயலாது.
நாளை வரை பயணிகள் கப்பல் சேவை இருப்பதால் நாளை இலங்கையில் இருந்து கப்பல் நாகப்பட்டினம் வந்து அடைந்த பிறகே எவ்வளவு பேர் பயணித்தார்கள் என்பது குறித்த தகவல் தெரிவிக்கப்படும்,” என பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.