சென்னையில் விரைவில் அறிமுகமாகிறது மிதக்கும் உணவகம்ஸ ?
16 Oct,2023
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய பெருநகரங்களில் சுற்றுலா பயணிகளை ஈர்க்க பல்வேறு முக்கிய சுற்றுலா ஈர்ப்பு தளங்களை உருவாக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு பகுதியில் கடலில் மிதக்கும் உணவகத்தை அறிமுகம் செய்ய உள்ளது தமிழக சுற்றுலாத் துறை.
இது குறித்து ஏற்கனவே செய்திகள் எல்லாம் வெளியாகியிருந்த நிலையில் தற்போது அந்த கப்பல் கட்டும் பணி முடியும் தருவாயில் உள்ளது. இதை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மேல் சென்று பார்வையிட்டார். இந்த மிதக்கும் உணவாக கப்பல் தற்போது சென்னை மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது எப்பொழுது பயன்பாட்டிற்கு வரும் என்ற ஆவல் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சென்னையில் உள்ள மக்களில் பலர் வார விடுமுறையை கழிக்க முட்டுக்காடு பகுதிக்கு பயணம் செல்வது அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் ஒவ்வொரு வாரமும் புதிதாக வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களை கவரும் வகையில் மிதக்கும் உணவகம் ஒன்றை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழக அரசு வழங்கிய அனுமதியில் கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று இந்த மிதவை கப்பலை உருவாக்கி வருகிறது.