பகலில் நோட்டம் இரவில் திருட்டு என்று பகட்டாக சுற்றித்திரிந்த ஓட்டுநர் சிசிடிவி காட்சியால் போலீஸிடம் சிக்கினர்
சென்னை குரோம்பேட்டை பகுதியில் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் சோழிங்கநல்லூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 1-ஆம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டுஉறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் விருந்திற்கு சென்றிருந்தார்.மீண்டும் மறுநாள் தனது வீட்டிற்கு வந்தவர் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
வீட்டில் உள்ளே சென்று பார்த்த போது அங்கு பீரோவில் மறைத்து வைத்திருந்த சுமார் 20,சவரன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது. உடனே இதுகுறித்த சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.
மேலும் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து பார்த்த போது,அதில் குற்றவாளி குறித்த எவ்வித தடயமும் சிக்க வில்லை. மாறாக சம்பவம் நடைபெற்ற அன்று ஒரு கால் டாக்ஸி மட்டும் வந்து செல்வது கேமராவில் பதிவாகி இருந்தது. ஏதாவது சவாரி வந்திருக்கக் கூடும் என்று எளிதாக கடந்து செல்ல நினைத்த போலீசார்,எதற்கும் விசாரணை செய்து தான் பார்ப்போமே என்று விசாரித்துள்ளனர்.
அந்த கார் நம்பரை சோதனை செய்து பார்த்த போது, அந்த கார் பல்லாவரம் பகுதியை சேர்ந்த பாலாஜி (வயது-41) என்பவருக்குச் சொந்தமானது என்று தெரியவந்தது. அதனால் பாலாஜியை தேடி போலீசார் அவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது அங்கு பாலாஜி இல்லை. மேலும்,பாலாஜி குறித்து விசாரணை மேற்கொண்ட போது சங்கர் நகர், குன்றத்துார்,மாங்காடு உட்பட சென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.
விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்:
உஷாரான போலீசார், வாடகைக்கு சவாரி கேட்பது போல் நைசாக போன் செய்து பேசி அவரை பல்லாவரம் ரேடியல் சாலைக்கு வரவழைத்தனர்.சவாரி தான் வந்துள்ளது என்று நம்பி வந்த பாலாஜியை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர் பின்னர் அவரை சிட்லப்பாக்கம் காவல் நிலையம் அழைத்துச் சென்று முறைப்படி விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணை கொஞ்சம் பலமாக இருந்தால் ராஜேஷ் வீட்டில் நகை திருடியதை ஒப்புக் கொண்டார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் அனகாபுத்தூர் பேருந்து நிலையம் அருகே நான் குடும்பத்துடன் பூ வியாபாரம் செய்து வந்தேன்.அதில் வருமானம் மிகக் குறைவாக இருக்கவே,குடும்பத்தை நடத்தவே மிகவும் சிரமப்பட்டேன். இதனால் கால் டாக்ஸி ஒன்றை வாங்கி சவாரி ஓட்டினால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்ற ஆசையில் தவணை முறையில் கார் வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தேன்.
இந்த நிலையில் கடந்த 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் உலகையே புரட்டிப் போட்ட கொரோனா என்ற கொடிய நோயின் பாதிப்பு அதிகமாக இருக்கவே வாடகைக்கு சவாரி எதுவும் ஓட்ட முடியவில்லை. அதனால் சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டதுடன் வண்டிக்கான தவணைத் தொகையும் கட்ட முடியவில்லை. இதனால் முதன் முதலில் குன்றத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சவாரி செல்லும் பொழுது பூட்டி இருந்த வீடு ஒன்றை நோட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டேன். முதல் திருட்டு என்பதால் திருடிய சில மணி நேரங்களிலேயே போலீசார் என்னை எளிதாக பிடித்து சிறையில் அடைத்தனர்.அத்துடன் நான் கொள்ளையடித்த பொருட்களையும் மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைத்தனர் எனக் கூறியுள்ளார்.
மேலும் தனது மனைவி மற்றும் உறவினர்கள் எனக்கு அறிவுரை கூறி உழைத்து வாழக் கூறினர்.அதனால் இரண்டு ஆண்டுகள் திருடாமல் இருந்து வந்தேன்.இந்த நிலையில் எனக்கு மேலும் கடன் தொல்லை அதிகமானது. நான் என்னதான் உழைத்து சம்பாதித்த பணத்தில் கடனுக்கான வட்டி கட்டினாலும் கூட, கடன் தொகை மட்டும் குறைந்தபாடில்லை. கடனை அடைக்க வழி தெரியாமல் அவதிப்பட்டேன். அதன் காரணமாக கடனை விரைவாக அடைப்பதற்கு திருட்டு மூலம் கிடைக்கும் பணமே சிறந்த வழி என்று எனக்கு நானே முடிவு செய்து அன்று முதல் தொடர் திருட்டில் ஈடுபடத் தொடங்கினேன்.
இவ்வாறு பகலில் வாடகைக்குச் செல்வது போன்று டிப்-டாப்பாக உடையணிந்து ரெடியாகி ,காரை எடுத்துக் கொண்டு வசதியானவர்கள் இருக்கும் பகுதிக்குச் சென்று,அங்கு எந்த வீடு பூட்டி இருக்கிறது,ஆள் நடமாட்டம் எவ்வாறு உள்ளது என்று தெரிந்து கொள்வேன். நான் டாக்சியில் செல்வதால் யாருக்கும் என் மீது சந்தேகம் வராது. அதன் பின்னர் மீண்டும் அன்று இரவே அந்த இடத்திற்குச் சென்று, தேர்வு செய்து வைத்திருக்கும் வீட்டில் எனது கொள்ளை திட்டத்தை அரங்கேற்றி விட்டு வருவேன். நான் என்னதான் திறமையாக கொள்ளையடித்தாலும் கூட, போலீசார் என்னை விட திறமையாக துப்புதுலக்கி, என்னை கைது செய்து சிறையில் அடைத்து விடுகின்றனர்.
கடைசியாக ஒரு முறை இந்த திருட்டில் ஈடுபட்டு,பெரிய தொகையை கொள்ளையடித்துச் சென்று எனது கடனையெல்லாம் அடைத்து விடலாம் என்று நினைத்து கொள்ளையடித்த நிலையில் இம்முறையும் என்னை போலீசார் கைது செய்து விட்டனர் என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர். அதன் பின்னர் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்து அவனிடமிருந்து 18,சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்து நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.