இஸ்ரேலில் இருந்து தாயகம் திரும்பிய 21 தமிழர்கள்!
13 Oct,2023
இஸ்ரேல் - ஹமாஸ் இடையில் போர் தொடங்கியுள்ள நிலையில், அந்நாட்டில் சிக்கி தவித்து வந்த முதல்கட்டமாக 212 இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்ட நிலையில் அதில் 21 தமிழர்கள் உள்ளனர். அவர்கள் இன்று பிற்பகல் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் - ஹமாஸ் ஆயுதக்குழு இடையேயான போர் இன்று 7ம் நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரால் இஸ்ரேலில் பல இந்தியர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்க மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வந்தது.
இந்நிலையில், இஸ்ரேலில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் அஜய்' என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. அதன்படி, டெல்லியில் இருந்து நேற்று இஸ்ரேலுக்கு முதல் மீட்பு விமானம் அனுப்பப்பட்டது.
அந்த விமானம் மூலம் முதல் கட்டமாக 212 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு முதல் மீட்பு விமானம் இன்று காலை டெல்லி வந்தடைந்தது. டெல்லி விமானநிலையம் வந்தடைந்த இந்தியர்களை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேரில் சென்று வரவேற்றார். இந்த நிலையில் டெல்லி வந்தடைந்தவர்களில் 21 தமிழர்களும் உள்ளனர். அவர்கள் அனைவரும் இன்று பிற்பகல் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.