இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை பகிர்ந்தது சுவிட்சர்லாந்து!
10 Oct,2023
தொடர்ந்து 5-வது ஆண்டாக இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்கு விவரங்களை இந்தியாவிடம் சுவிட்சர்லாந்து அரசு ஒப்படைத்துள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், கருப்பு பணத்தை பாதுகாப்பாக வைக்கும் இடங்களாக கருதப்படுவதால், இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த பெரும் பணக்காரர்கள் கணக்கில் காட்டப்படாத பணத்தை அங்கு டெபாசிட் செய்துள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து, சுவிஸ் வங்கிகளில் உள்ள வெளிநாட்டினரின் கணக்கு விவரங்களை அந்தந்த நாட்டிடம் சுவிட்சர்லாந்து பகிர்ந்து கொண்டு வருகிறது. இந்தியாவிடம் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து இந்தியர்களின் வங்கி கணக்கு விவரங்களை முதல் முறையாக பகிர்ந்து கொண்டது.
இந்நிலையில், தொடர்ந்து 5-வது ஆண்டாக இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்கு விவரங்களை இந்தியாவிடம் சுவிட்சர்லாந்து அரசு ஒப்படைத்துள்ளது. கடந்த மாத இறுதியில் இந்த விவரங்கள் வந்து சேர்ந்ததாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த 5வது தொகுப்பில், இந்தியா உள்பட 104 நாடுகளைச் சேர்ந்த 36 லட்சம் வங்கி கணக்குகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தனிநபர்கள், நிறுவனங்கள், தொழிலதிபர்கள், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குடியேறிய வெளிநாடுவாழ் இந்தியர்கள், அரசியல்வாதிகள், அரச குடும்பத்தினர் ஆகியோரின் வங்கி கணக்கு மற்றும் சிலரது ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்கு விவரங்கள் இடம்பெற்றுள்ளன.