பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விபத்து.. 40 பேரின் கதி என்ன?
30 Sep,2023
சென்னை: சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், சைதாப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்கின் மேற்கூரை சரிந்து விழுந்ததில் 40-க்கும் மேற்பட்டோர் அந்த இடிபாடுகளில் மாட்டிக் கொண்டுள்ளனர். அவர்களின் நிலைமை என்ன என்று இதுவரை எதுவும் தெரியவில்லை. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.
சென்னையில் அண்மைக்காலமாக இரவு நேரங்களில் கனமழை பெய்வது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், இன்று மாலை 6 மணி முதலாகவே சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்ட தொடங்கியது. இந்நிலையில், சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் மழைக்காக பல இருசக்கர வாகன ஓட்டிகள் தஞ்சமடைந்தனர். சிலர் பெட்ரோல் போடுவதற்காகவும் அங்கு வந்தனர்.
இந்நிலையில், இரவு சுமார் 7.45 மணியளவில் அந்த பெட்ரோல் பங்கின் மேற்கூரை பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதில் அங்கிருந்த வாகன ஓட்டிகள் அப்படியே சிக்கிக் கொண்டனர். இதையடுத்து, அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில், 2, 3 தீயணைப்பு வண்டிகளில் வந்த வீரர்கள், துரிதமாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், மேற்கூரை இடிபாடுகள் கனமாக இருந்ததால் அவர்களால் அதை நகர்த்த முடியவில்லை. இதனைத் தொடர்ந்து, தற்போது ஜேசிபி இயந்திரம் கொண்டு வரப்பட்டு இடிபாடு அகற்றப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களின் நிலை என்ன என்பது பற்றி இதுவரை எதுவும் தெரியவில்லை.
மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெட்ரோல் இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதிலும் தீயணைப்பு வீரர்கள் கவனமாக உள்ளனர். சம்பவ இடத்திற்கு சைதாப்பேட்டை போலீஸாரும் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.