கைம்பெண்களுக்கு உதவும் வகையில், வித்வா பென்சன் யோஜனா எனும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது
ஏழை, எளிய பெண்களுக்கு நலனுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதில், முக்கியமானது கைம்பெண்களுக்கான பென்சன் திட்டம். வித்வா பென்சன் யோஜனா எனும் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களில் உள்ள கைம்பெண்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
கணவனை இழந்து பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்படும் பெண்களுக்கு உதவுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். 18 முதல் 60 வயது வரை உள்ள கைம்பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். கைம்பெண்கள் காலமான பின்னர், அவர்களது வாரிசுகள் அல்லது பிற குடும்ப உறுப்பினர்கள் தகுதி பெற மாட்டார்கள்.
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குக் குறைவாக உள்ள கைம்பெண்களுக்கு மட்டுமே இந்த நிதிஉதவி கிடைக்கும்.
கைம்பெண் பென்சன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. குறைந்தபட்சம் மாதம் ரூ.300 முதல் அதிகபட்சமாக மாதந்தோறும் ரூ.2000 வரை வழங்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்த வரை இந்த திட்டத்தின் கீழ் கைம்பெண்களுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
தேவையான ஆவணங்கள், தகுதிகள் என்ன?
** வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள கைம்பெண்கள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் பலன்பெறலாம். வேறு எந்த ஓய்வூதியத் திட்டத்தையும் பயன்படுத்தாத பெண்களுக்கு இத்திட்டத்தின் பலன்கள் வழங்கப்படுகிறது.
** விண்ணப்பிக்கும் பெண்களின் வயது வரம்பு 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.
** கணவன் இறந்த பிறகு கைம்பெண்கள் மறுமணம் செய்து கொண்டால், இந்த திட்டத்தின் கீழ் அப்பெண் பலன்களை பெற முடியாது.
** விண்ணப்பதாரர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அடையாளச் சான்று (வாக்காளர் அட்டை/ ரேஷன் கார்டு/ ஆதார் அட்டை), வயது சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வங்கி பாஸ்புக், கணவரின் இறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ் ஆகியவை இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் ஆகும்.