6 மாநிலங்களில் 7 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க. 3 இடங்களில் வெற்றி பெற்றது. எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி 4 தொகுதிகளை கைப்பற்றியது.
6 மாநில இடைத்தேர்தல் உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், ஜார்கண்ட், உத்தரகாண்ட், திரிபுரா, கேரளா ஆகிய 6 மாநிலங்களில் காலியான 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இந்த தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது.
அதில் பா.ஜ.க. 3 இடங்களில் வெற்றி ஈட்டியது. எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் தலா ஒரு இடத்தை கைப்பற்றின.
சமாஜ்வாடி வெற்றி உத்தரபிரதேச மாநிலத்தின் கோசி தொகுதியை சமாஜ்வாடி கட்சி தக்கவைத்துக்கொண்டது. ஆளும் பா.ஜ.க., எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி இடையிலான முதல் முக்கிய தேர்தல் மோதலாக கருதப்படும் இந்த தொகுதி இடைத்தேர்தலில் சமாஜ்வாடி வேட்பாளர் சுதாகர் சிங் அபார வெற்றி பெற்றார்.
அவர், பா.ஜ.க.வின் தாராசிங் சவுகானை 42 ஆயிரத்து 759 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல்
மேற்கு வங்காள மாநிலம் துப்குரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் நிர்மல் சந்திர ராய் வெற்றிபெற்றார்.
அவர் பா.ஜ.க. வேட்பாளர் தபசி ராயை 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். முன்பு பா.ஜ.க. வசமிருந்த இந்த தொகுதியை திரிணாமுல் கைப்பற்றியுள்ளது. பா.ஜ.க. வேட்பாளரான தபசி ராய், காஷ்மீரில் கடந்த 2021-ம் ஆண்டு பயங்கரவாதிகள் தாக்குதலில் கொல்லப்பட்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரரின் மனைவி ஆவார்.
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஜார்கண்ட் மாநிலத்தில் தும்ரி தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளர் பெபி தேவி வெற்றி பெற்றார். அவர், அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்க வேட்பாளர் யசோதா தேவியை விட 17 ஆயிரத்து 100 வாக்குகள் அதிகம் பெற்றார்.
பெபி தேவி, தும்ரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாநில மந்திரியுமான ஜெகர்நாத் மாட்டோவின் மனைவி ஆவார். ஜெகர்நாத்தின் மரணத்தை தொடர்ந்து இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. உத்தரகாண்ட், திரிபுராவில் பா.ஜ.க. வெற்றி உத்தரகாண்ட் மாநிலத்தில் பாகேஸ்வர் சட்டப்பேரவை தொகுதியை பா.ஜ.க. தக்கவைத்தது.
அந்த தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் பார்வதி தாஸ், காங்கிரஸ் வேட்பாளர் பசந்த்குமாரை 2 ஆயிரத்து 405 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
இந்த தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. சந்தன் ராம் தாசின் மனைவிதான் பார்வதி தாஸ். சந்தன் ராம் தாஸ் மரணத்தை தொடர்ந்து இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. திரிபுரா மாநிலம் சேபஹிஜாலா மாவட்டத்தில் உள்ள தன்பூர், பாக்சாநகர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது.
தன்பூர் தொகுதியில் பிந்து தேப்நாத்தும், பாக்சாநகர் தொகுதியில் தபஜால் ஹுசைனும் வெற்றி பெற்றனர். இந்த வெற்றிகளால், 60 உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் ஆளும் பா.ஜ.க.வின் பலம் 33 ஆக உயர்ந்தது. தன்பூர், பாக்சாநகர் இடைத்தேர்தல் வெற்றிக்காக திரிபுரா மக்களுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நன்றி தெரிவித்துள்ளார்.
உம்மன் சாண்டி மகன் வெற்றி கேரளாவில் முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி மரணத்தால் காலியான புதுப்பள்ளி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் உம்மன் சாண்டி மகனும், காங்கிரஸ் வேட்பாளருமான சாண்டி உம்மன் 37 ஆயிரத்து 719 வாக்குகள் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றார்.