சீன ஷி யான் 6 இலங்கை வருகையால் இந்தியா அதிருப்தி!
30 Aug,2023
சீன கடல்சார் ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6 இன் இலங்கைக்கான பயணத்தை ஒத்திவைக்குமாறு இந்தியா கோரியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையிலேயே, இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு தொடர்பான கரிசனைகளையும் மீறி கடந்த வருடம் சீனாவின் யுவான் வாங் 5 கப்பல் இலங்கையை சென்றடைந்திருந்தது.
இந்த நிலையில், தற்போது ஷி யான் 6 சிறிலங்கா துறைமுகத்தில் நங்கூரமிடப்படுவது இந்தியாவின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளதென அந்த நாட்டு பாதுகாப்புத்துறையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பலை இலங்கை துறைமுகத்தில் நங்கூரமிட அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், அதற்கு இந்திய மத்திய அரசு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனைக்கமைய அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் விஜயமாக இந்த வார இறுதியில் இலங்கையை வந்தடையவுள்ளார்.
அதிபருடனான கலந்துரையாடல்
இதன் போது, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்களையும் சீன கடல்சார் ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6 இன் பயணம் குறித்தும் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் அவர் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சிறிலங்கா அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டம் விரைவாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், கச்சதீவை மீண்டும் இந்தியாவுக்கே வழங்க வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை ராஜ்நாத் சிங் சிறிலங்கா அதிபரிடம் முன்வைக்கவுள்ளதாகவும் இந்திய பாதுகாப்புத்துறையின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஒக்டோபர் மாதம் சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அதன் பின்னர் சீன ஆராய்ச்சி கப்பல், இலங்கைக்கான பயணத்தை மேற்கொள்ள வேண்டுமென இந்தியா கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.