சீனா வெளியிட்டுள்ள புதிய ஸ்டாண்டர்டு மேப் வரைபடத்தில் இந்தியாவின் அருணாச்சலப்பிரதேசத்தின் சில பகுதிகள், அக்சய் சின் பகுதி மற்றும் தைவான் உள்ளிட்ட பகுதிகள் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுஸ
சீன அரசாங்கம் ஆகஸ்ட் 28 அன்று சீனாவின் நிலையான வரைபடத்தின் 2023 பதிப்பை வெளியிட்டுள்ளது. இதில் அருணாச்சல பிரதேசம் மற்றும் அக்சாய் சின் பகுதி முழுவதும் சீனாவின் எல்லைக்குள் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, இந்த வரைபடத்தில், முழு தென்சீனக் கடல் மற்றும் தைவானையும் சீனா தனது பிரதேசமாக அறிவித்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 11 இடங்களின் பெயர்களை சில காலத்திற்கு முன்பு சீனா மாற்றியது. அவ்வாறு செய்வதால் அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை மாற்றிவிட முடியாது என்று இந்தியா தெளிவாகக் கூறியிருந்தது.
இப்போது புதுதில்லியில் நடைபெறவுள்ள ஜி-20 உச்சிமாநாட்டிற்கு சில நாட்களுக்கு முன்பு, சீனா தனது 'நிலையான வரைபடத்தின்' (சீனா புதிய வரைபடம்) 2023 பதிப்பை அதிகாரப்பூர்வமாக திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது. இந்த வரைபடத்தின் மூலம், இந்த பகுதிகளில் சீனா தனது உரிமைகோரல்களை வலுப்படுத்த விரும்புவதாக தெரிகிறது. அருணாச்சலப் பிரதேசம் தனது ஒருங்கிணைந்த பகுதி என்றும், அதில் ஒருபோதும் மாற்றமில்லை என்றும் இந்தியா பலமுறை கூறி வருகிறது. ஆனாலும், சீனாவின் அதிகாரப்பூர்வ ஊடகமான குளோபல் டைம்ஸ் 2023 ஆம் ஆண்டுக்கான சீனாவின் நிலையான வரைபடத்தை X தளத்தில் (முன்னதாக ட்விட்டர்) பகிர்ந்துள்ளது.
சீனாவின் இயற்கை வள அமைச்சகத்துக்குச் சொந்தமான ஸ்டாண்டர்ட் மேப் சேவையின் இணையதளத்தில் இது வெளியிடப்பட்டதாக குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. சீனா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளின் தேசிய எல்லைகளை வரைவதன் அடிப்படையில் இந்த வரைபடம் உருவாக்கப்பட்டது என்று சீனா கூறியுள்ளது. ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது, பிரதமர் நரேந்திர மோடியும் சீனத் தலைவர் ஜி ஜின்பிங்கும் ஒருவரையொருவர் சந்தித்து ஒரு வாரத்திற்குள், பெய்ஜிங் புதிய வரைபடத்தை அறிமுகப்படுத்தி, அதற்கு 'ஸ்டாண்டர்ட் மேப்' என்று பெயரும் வைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் சில பகுதிகள் சீனப் பகுதிகளாக தவறாகக் காட்டப்பட்டது.
புதுதில்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வருவதற்கு முன்னதாக இந்த வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. இதில், சீனாவின் எல்லைக் கோரிக்கைக்கான உலகப் புகழ்பெற்ற 9-கோடு மீண்டும் காட்டப்பட்டுள்ளது. 9-கோடு 1940 களில் சீன புவியியலாளர் மூலம் ஒரு வரைபடத்தில் வரையப்பட்டது. இது U- வடிவ கோடு ஆகும், இது தென் சீனக் கடலின் 90 சதவீதத்தை உரிமை கோருகிறது. ஆனால் அந்தப் பகுதியை பிலிப்பைன்ஸ் அரசு வடக்கு பிலிப்பைன்ஸ் கடல் என்று அழைக்கிறது.
அருணாச்சல பிரதேசத்தின் மீது சீனா எப்போதும் மறைமுகமாக தனது அதிகாரத்தை நிலைநிறுத்தி வருகிறது. அருணாச்சல பிரதேசத்திற்கு எந்த அரசியல்வாதியும் வருவதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் சீனா தனது வரைபடத்தில் அருணாச்சல பிரதேசத்தின் 11 இடங்களின் பெயர்களை மாற்றியது. இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் சீனாவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதால் இத்தகைய முயற்சிகள் உண்மையை மாற்றாது என இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. வரைபடத்தின் மூலம் ஆக்கிரமிப்பைக் காட்டும் மனப்பான்மையை 1949 ஆண்டு முதல் சீன அரசு முன்னெடுத்து வருகிறது. அதில் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம், இமாச்சலப்பிரதேசத்தின் சில பகுதிகள் சீனாவுக்குச் சொந்தமானதாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இதற்கு இந்தியா தொடர்ந்து தனது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது.
இதனிடையே சீனா புதிய வரைபடம் வெளியிட்ட விவகாரம் இந்தியாவில், அரசியல் ரீதியிலான விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக எதிர்கட்சி தலைவர்கள் தொடர்ந்து கருத்துக்களை கூறி வருகின்றனர்.