நிலவின் தென் துருவ பகுதியில் இஸ்ரோவின் சந்திரயான் 3 தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ள நிலையில், இதற்கு காரணமான விஞ்ஞானிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று(26) நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கிரீஸ் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு நேரடியாக பெங்களூர் விமான நிலையத்திற்கு வந்துள்ள பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நிலவின் தென் துருவத்தில் உள்ள பள்ளத்தாக்குகளில் பல பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியே படாமல் இருக்கின்ற நிலையில் இங்கு நீர் இருப்பதற்கான சாத்தியங்களை சந்திரயான் -1 விண்கலம் கண்டுபிடித்தது.
சந்திரயான் -3 விண்கலம்
அதன் பின்னர் நிலவை யார் ஆக்கிரமிக்கப்போகிறார்கள் என்கிற போட்டி தொடங்கியதால் இதனையடுத்து நிலவில் ரோவரை இறக்கி அதன் மூலம் ஆய்வு செய்ய கடந்த 2019ஆம் ஆண்டு சந்திரயான் -2 திட்டத்தை செயற்படுத்தியது இஸ்ரோ.
ஆனால் இந்தத் திட்டத்தில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்ப தவறால் நிலவில் தரையிறங்க இருந்த ரோவர் வேகமாக மோதி உடைந்தது. இருப்பினும் இதனைக் கொண்டு சென்ற ஆர்பிட்டர் தற்போது வரை செயற்பட்டு வருகின்றது.
எனவே மீண்டும் மற்றொரு ரோவரை அனுப்புவது என்று முடிவெடுத்து சந்திரயான் -3 திட்டம் செயற்படுத்தப்பட்டது.
அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 14ஆம் திகதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் கடந்த 23ஆம் திகதியன்று மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி நிலவில் மெல்ல தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது.
விண்வெளி துறையின் முன்னோடியான ரஷ்யா அனுப்பிய லூனா - 25 விண்கலம் கூட நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க முடியாமல் செயலிழந்த நிலையில், இந்தியாாவின் சந்திரயான் - 3 வெற்றிகரமாக தரையிறங்கி இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இந்நிலையில் இதற்கு காரணமான விஞ்ஞானிகளை, சந்திரயான் -3 தரையிறங்கிய நாளன்றே பிரதமர் நரேந்திர மோடி காணொளி அழைப்பு மூலம் அழைத்து வாழ்த்து கூறியிருந்தார்.
அந்தச் சமயம் தென்னாபிரிக்காவின் பிரிக்ஸ் மாநாடு நடந்து கொண்டிருந்ததால் அவரால் விஞ்ஞானிகளை நேரில் சந்திக்க முடியவில்லை.
அதேபோல, இந்த மாநாடு முடிந்த கையோடு கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாக்கிஸ் அழைப்பின் பேரில் நரேந்திர மோடி கிரீஸ் நாட்டுக்கு சென்றிருந்தார்.
பிரதமர் மோடி கிரீஸ் செல்வது இதுவே முதல்முறை. அதேபோல கடந்த 40 ஆண்டுகளுக்கு பின்னர் கிரீஸ் செல்லும் இந்திய பிரதமர் என்கிற பெருமையையும் பெற்றிருக்கிறார். கிரீஸில் அதிபர் மற்றும் பிரதமரைச் சந்தித்து இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இதனையடுத்து இன்று அவர் பெங்களூர் திரும்பியுள்ளார். காலை 6.30 மணியளவில் எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து தரை மார்க்கமாக பீனியாவில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார்.
இன்று காலை 7 மணியளவில் நரேந்திர மோடி இஸ்ரோ தரை கட்டுப்பாட்டு மையத்திற்குச் சென்று சந்திரயான்-3 திட்டப் பணியில் ஈடுபட்ட விஞ்ஞானிகளைப் பாராட்டி கௌரவித்தார்.
இந்நிலையில் “இன்று காலை பெங்களூர் வந்து சேர்ந்தவுடன், சந்திரயான் 3 வெற்றி மூலம் இந்தியாவை பெருமைப்படுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நமது நாட்டின் விண்வெளித்துறை சாதனைகளுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பும் ஆர்வமும் உந்து சக்தியாக இருக்கிறது" என்று நரேந்திர மோடி தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.