விடுதலைப் புலிகள் விவகாரம் இந்தியா தேசிய புலனாய்வு பிரிவால் மற்றொருவர் கைது
26 Aug,2023
இந்தியா - இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருள், ஆயுத வியாபாரம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் தொடர்பில் மற்றொருவரை இந்தியாவில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ (NIA) கைது செய்துள்ளது.
இது தொடர்பில் தமிழகத்தில் வைத்து முக்கிய சந்தேகநபரான லிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
சென்னையில் வசிப்பவர், லிங்கம் மற்றொரு குற்றஞ்சாட்டப்பட்ட குணசேகரனின் நெருங்கிய நண்பனாக இருந்துள்ளார்.
அத்துடன் இந்தியாவிலும் இலங்கையிலும் போதைப்பொருள் மற்றும் ஆயுத வர்த்தகத்தின் வருமானத்தில் மோசடி செய்வது தொடர்பான சட்டவிரோத பரிவர்த்தனைகளுக்கும் லிங்கம் முக்கியமானவராக செயற்பட்டு வந்துள்ளார்.
என்.ஐ.ஏ விசாரணை
குற்றம் சாட்டப்பட்ட லிங்கம், இந்தியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதை சட்டப்பூர்வமாக்கும் முயற்சியில் மோசடி உறுப்பினர்களுக்கான போலி அடையாள ஆவணங்களையும் தயாரித்துள்ளதாக என்.ஐ.ஏ விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை இவர்கள், பாகிஸ்தானியரான ஹாஜி சலீம் என்பவரிடம் இருந்து இந்த சட்டவிரோத போதைப்பொருட்களைப் பெற்றனர் என்பதும் என்.ஐ.ஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலையில் பதிவு செய்யப்பட்ட சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுத வியாபார வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 14ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.