க்யூ.ஆர் கோடு மூலம் மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் பெங்களூருவில் அதிகரித்து வருகின்றன. ஒரே ஒரு ஸ்கேன் செய்தால் போதும் எனக் கூறி வரும் மெசேஜ்கள் கலக்கத்தை ஏற்படுத்துகின்றன. சமீபத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
கடந்த 6 மாதங்களில் மட்டும் சுமார் 1,000 புகார்கள் குவிந்துள்ளன
பொதுமக்கள் உஷாராக இருக்க சைபர் கிரைம் போலீஸ் அறிவுறுத்தல்
அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் - டிவிகள், வாஷிங் மெஷின்கள் மற்றும் குளிர்சாதனப் பெட்டிகள் ஆகியவற்றுக்கான ஆரம்ப சலுகைகள் 65% வரை தள்ளுபடி
"நான் பயன்படுத்தி வரும் வாஷிங் மெஷனை விற்க வேண்டும் என்று விரும்புகிறேன். நல்ல கண்டிஷனில் உள்ளது. விருப்பமுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம்". இப்படி ஒரு அறிவிப்பை ஆன்லைன் மார்க்கெட் பிளேஸ் மூலம் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் (IISc) கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வெளியிட்டார்.
க்யூ.ஆர் கோடு மோசடி
அடுத்த சில நாட்களில் யாரோ ஒருவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. "நான் உங்கள் வாஷிங் மெஷினை வாங்கி கொள்கிறேன். என்ன விலை சொல்கிறீர்களோ? அதே விலைக்கு வாங்கி கொள்ள தயார்" என ஆச்சரியம் அளித்துள்ளார். அதன்பிறகு, "நான் ஒரு க்யூ.ஆர் கோடு அனுப்பி வைக்கிறேன். அதை ஸ்கேன் செய்யுங்கள். உங்கள் வங்கி கணக்கிற்கு என்னிடம் இருந்து பணம் வந்து சேரும்" எனக் கூறியுள்ளார்.
பெங்களூருவில் திக் திக்
அதை நம்பி அந்த பேராசிரியரும் ஸ்கேன் செய்ய அடுத்தடுத்து பல இன்ஸ்டால்மென்ட்டாக 63,000 ரூபாய் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டு விட்டது. இதை பார்த்ததும் பேராசிரியர் அதிர்ந்து போனார். இதேபோல் பெங்களூருவில் மற்றொரு சம்பவம். 30 வயது மதிக்கத்தக்க இல்லத்தரசி ஒருவர் தன்னிடம் இருக்கும் வீணையை ஆன்லைன் மூலம் விற்க வேண்டும் என்று விரும்பினார். இதுதொடர்பாக ஆன்லைன் மார்க்கெட்டில் பதிவிட்டுள்ளார்.
லிங்க் மூலம் மோசடி
அடுத்த சில மணி நேரங்களில் பெண் ஒருவரிடம் இருந்து அழைப்பு வந்தது. உங்கள் வீணையை நான் வாங்கி கொள்கிறேன். உங்கள் வங்கி கணக்கு விவரங்களை மட்டும் அனுப்பி வையுங்கள் எனக் கூறியுள்ளார். அவரும் அனுப்பி வைத்தார். உடனே இல்லத்தரசியின் மொபைலுக்கு லிங்க் ஒன்று வந்துள்ளது.
”அதை கிளிக் செய்தால் உங்கள் வங்கி கணக்கிற்கு பணம் வந்துவிடும்” எனக் கூறியுள்ளார். கிளிக் செய்ததும் இல்லத்தரசியின் வங்கியில் இருந்து 20,000 ரூபாய் உடனடியாக எடுக்கப்பட்டு விட்டது.
சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
மேற்குறிப்பிட்ட இரு சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் உடனே சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து தங்கள் பணத்திற்காக காத்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறு க்யூ.ஆர் கோடு மோசடிகளை நம்பி ஏமாற வேண்டும் என்று போலீசார் எச்சரித்து வருகின்றனர். ஆனால் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. பெங்களூருவில் கடந்த 2017 முதல் மே 2023 வரை 50,027 சைபர் கிரைம் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
குற்றங்கள் அதிகரிப்பு
அதில் 41 சதவீதம், அதாவது 20,662 புகார்கள் க்யூ.ஆர் கோடு மோசடிகள். நடப்பாண்டின் முதல் 6 மாதத்தில் மட்டும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆன்லைன் மோசடி புகார்கள் வந்துள்ளன. அதில் 950 க்யூ.ஆர் கோடு மோசடிகள் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டியது அவசியம்.