தகுதி நீக்க உத்தரவை மக்களவை செயலகம் திரும்பப் பெற்றதால் மீண்டும் வயநாடு தொகுதி எம்பியானார் ராகுல் காந்தி.
07 Aug,2023
மோடி சமூகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக கூறி தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தீர்ப்பு வெளியான ஓரிரு நாட்களிலேயே ராகுல் காந்தி எம்பி பதவியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்தது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றமும் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.
இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் அளித்த சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து ராகுல் காந்திக்கு உடனடியாக மீண்டும் எம்பி பதவி வழங்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தினர். இதற்கிடையே ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை ரத்து செய்யும் விவகாரத்தில் மக்களவை சபாநாயகரும், மக்களவை செயலாளரும் வேண்டும் என்றே தாமதப்படுத்துவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.
இந்த நிலையில், தகுதி நீக்க உத்தரவை திரும்பப் பெறுவதாக மக்களவை செயலகம் இன்று அறிவித்தது. இதனால் மீண்டும் வயநாடு தொகுதி எம்பியானார் ராகுல் காந்தி . ராகுல் காந்தியின் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததை தொடர்ந்து மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை சுட்டிக் காட்டி மக்களவை செயலகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதி எம்.பி ஆகியுள்ளார். இதனால் நாளை தொடங்க உள்ள மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி பங்கேற்பார்.