இந்தியில் பேசியதால் அமெரிக்காவில் பணி நீக்கம் செய்யப்பட்ட இந்திய வம்சாவளி பொறியாளர்ஸ
04 Aug,2023
வர்ஷினி கடந்த 1968 ஆம் ஆண்டு ஹன்ட்ஸ்வில் நகரில் குடிபெயர்ந்துள்ளார். இதையடுத்து அவர் அமெரிக்க குடிமகனாக மாறினார்.
இந்தியில் பேசியதால் அமெரிக்காவில் பொறியாளராக பணியாற்றி வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 76 வயதாகும் அனில் வர்ஷினி அமெரிக்காவின் அலபாமாவில் பாதுகாப்பு தொடர்பான ஏஜென்ஸியில் பொறியாளதாக பணியாற்றி வந்தார்.
அனில் வர்ஷினிக்கு அவரது மைத்துனர் கே.சி. குப்தாவிடம் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதி போன் அழைப்பு வந்துள்ளது. அப்போது கே.சி. குப்தா மரண படுக்கையில் இருந்தார். அவரிடம் இந்தியில் பேசிய அனில் வர்ஷினி அவருக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் வார்த்தைகளை கூறினார். சுமார் 2 நிமிடங்களுக்கு இந்த உரையாடல் நீடித்தது.
இந்த உரையாடலை சக ஊழியர் ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர், இந்த இடத்தில் போன் பேசுவதற்கு அனுமதியில்லை என்று கூறியதும், வர்ஷினி அந்த அழைப்பை துண்டித்தார். இதன்பின்னர் அந்த ஊழியர் உயர் அதிகாரிகளிடம், தன்னை புரியாத மொழியில் அனில் வர்ஷினி மிரட்டியதாக புகார் அளித்துள்ளார். வேறொரு மொழியில் பேசியதால், அனில் வர்ஷினி பாதுகாப்பு விபரங்களை மற்றவர்களுக்கு தெரிவித்து விட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வர்ஷினி கடந்த 1968 ஆம் ஆண்டு ஹன்ட்ஸ்வில் நகரில் குடிபெயர்ந்துள்ளார். இதையடுத்து அவர் அமெரிக்க குடிமகனாக மாறினார். அவரது மனைவி சாஷி நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் 1989 ஆம் ஆண்டில் இருந்து பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் தான் பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து அனில் வர்ஷினி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தன்னை மீண்டும் பணிக்கு அமர்த்தி, தனக்கு புரொமோஷன் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ள அவர் இல்லாவிட்டால், அதற்கு இணையான ஊதியத்தையும், பலன்களையும் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். பணி நீக்கம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சல், உணர்வு ரீதியிலான பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.,