ராட்சத இயந்திரம் விழுந்து தொழிலாளர்கள் பலர் உடல் நசுங்கி பலி. பிரதமர் மோடி இழப்பீடு அறிவிப்பு!
01 Aug,2023
சம்ருத்தி எக்ஸ்பிரஸ் ஹைவே சாலையின் மூன்றாம் கட்டப் பணிகளில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் தானே அருகே ஷாபூர் பகுதியில் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை பணிகள் நடந்து வருகின்றன. அதாவது சம்ருத்தி எக்ஸ்பிரஸ் சாலையின் மூன்றாம் கட்டப் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பிரம்மாண்ட கிர்டர் இயந்திரம் ஒன்று சரிந்து பாலத்தின் ஸ்லாப் மீது விழுந்துள்ளது.
இதில் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர். இந்த இடம் ஷாபூரில் உள்ள குடாடி சர்லாமே கிராமத்திற்கு அருகில் என்பது கவனிக்கத்தக்கது. தகவலறிந்து விரைந்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் 17 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களது உடல்கள் மீட்கப்பட்டு ஷாஹாபூர் கிராமின் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவர்களில் 5 பேர் சைட் எஞ்சினியர்கள், 11 பேர் தொழிலாளர்கள் அடங்குவர். மேலும் 3 பேர் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 6 பேர் ராட்சத இயந்திரத்திற்கு அடியில் சிக்கி கொண்டதாக சொல்லப்படுகிறது. அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தற்போது தேசிய பேரிடர் மீட்பு படையினர் விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். இதுதவிர போலீசார், தீயணைப்பு படையினர், நெடுஞ்சாலைத் துறையினர் உள்ளிட்டோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இரங்கல் தெரிவித்துள்ள மகாராஷ்டிர துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்,
விபத்து குறித்து விசாரணை
விபத்து குறித்து விசாரிக்க வல்லுநர்கள் குழு அமைக்கப்படும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதற்கிடையில் அம்மாநில அமைச்சர் தாதா பூசே, விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். முதல்கட்ட விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பிரதமர் மோடி இரங்கல்
காயமடைந்த நபர்கள் விரைவாக மீண்டும் வர உரிய சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மகாராஷ்டிர மாநிலம் ஷாஹாபூரில் நடந்த சம்பவம் எதிர்பாராதது. மிகவும் மன வேதனையை ஏற்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
இழப்பீடு அறிவிப்பு
காயமடைந்தவர்கள் மீண்டு வர பிரார்த்தனை செய்கிறேன். உள்ளூர் நிர்வாகமும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் உரிய மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருமாறு அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக 2 லட்ச ரூபாயும், காயமடைந்த நபர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.