ஓடும் ரயிலில் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய RPF வீரர்.. 4 பேர் பலியான சோகம்.
31 Jul,2023
.
ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர்
ஜெய்ப்பூரில் இருந்து மும்பை செல்லும் ரயிலில் பயணித்த 4 பேரை ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) ஜவான் சுட்டுக் கொன்றார். பலியானவர்களில் மூன்று பயணிகள், ஒரு ரயில்வே பாதுகாப்பு படை உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் அடங்குவர்.
ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸின் (ரயில் எண் 12956) B5 பெட்டியில் இந்த சம்பவம் நடந்தது. இன்று அதிகாலை 5 மணியளவில் வாபியிலிருந்து போரிவலியிலிருந்து மீரா ரோடு நிலையத்திற்கு இடையே நடந்தது. ரயில்வே பாதுகாப்பு படை கான்ஸ்டபிள் சேத்தன் என்பவர் பயணிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட கான்ஸ்டபிளை மும்பை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரயில் 12956-ல் 31.7.23 அன்று மாலை 5.23 மணிக்கு பி5 பெட்டியில் துப்பாக்கிச் சூடு நடந்தது. பாதுகாப்பு பணியில் இருந்த சி.டி.சேத்தன், பாதுகாப்பு இன்சார்ஜ் துணை எஸ்.ஐ, டிகா ராம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது உறுதி செய்யப்பட்டது. துணை எஸ்.ஐ தவிர, 3 பொதுமக்களின் உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. துப்பாக்கியால் சுட்ட கான்ஸ்டெபிள் பிடிபட்டார். வடக்கு டிசிபி ஜிஆர்பிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவான அறிக்கை பின்னர் வெளியிடப்படும் ” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஜூலை 31, 2023 அன்று, ரயில் எண் 12956 ஜெய்ப்பூர் - மும்பை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸில் பாதுகாப்பு பணியில் இருந்த கான்ஸ்டபிள் சேத்தன் குமார் தனது சக எஸ்கார்ட் இன்சார்ஜ் ஏஎஸ்ஐ டிகா ராம் மற்றும் 3 பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதை தொடர்ந்து அவர், தாஹிசர் அருகே இறங்கி அலாரம் செயின் இழுத்து தப்பி ஓட முயன்றார். ஆனால், ஆயுதங்களுடன் இருந்த அவர் பின்னர் கைது செய்யப்பட்டார்,” என்று தெரிவித்தார். எனினும் இந்த சம்பவத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.