விசா இல்லாமல் வெளிநாடு.. பாஸ்போர்ட்ல இருக்கு ரேங்கிங் சிஸ்டம்.. இந்தியா நிலை
25 Jul,2023
ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் (Henley Passport Index) 2023-ஆம் ஆண்டிற்கான பாஸ்போர்ட் தரவரிசை பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த லேட்டஸ்ட் பாஸ்போர்ட் இன்டெக்ஸ் பட்டியலில் இந்தியா 80-வது இடத்தை பிடித்துள்ளது.
இந்த பட்டியலின் படி இந்தியா 2022-ல் இருந்த நிலையில் இருந்து தற்போது 5 இடங்கள் முன்னேறி உள்ளது. யுகே-வின் லண்டனை தளமாக கொண்ட உலகளாவிய குடியுரிமை மற்றும் குடியிருப்பு ஆலோசனை நிறுவனமான ஹென்லி மற்றும் அதன் பார்ட்னர்ஸால் தயாரிக்கப்படும் தரவரிசை பட்டியலே “Henley Passport Index” ஆகும்.
ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் என்பது ஒரு குறிப்பிட்ட நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், pre-departure விசா அப்ளிகேஷன் இல்லாமல், எத்தனை நாடுகளுக்கு செல்லலாம் என்பதன் அடிப்படையில், உலகம் முழுவதும் உள்ள அனைத்து பாஸ்போர்ட்டுகளின் வலிமையையும் அளவிடுகிறது. இதற்காக ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் 199 நாடுகளின் பாஸ்போர்ட்களையும், சர்வதேச விமானப் போக்குவரத்து ஆணைய தரவுகளின் அடிப்படையில் 227 பயண இடங்களுக்கான விசா அணுகலையும் ஒப்பிடுகிறது. Henley Passport Index 2023 பட்டியலில் 199 நாடுகளில் இந்தியா ஐந்து இடங்கள் முன்னேறி 80-வது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் 80-வது இடத்தை Togo மற்றும் Senegal உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த பாஸ்போர்ட் தரவரிசையில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து உலகில் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டை கொண்டுள்ள நாடு என்ற பெருமையை சிங்கப்பூர் பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து சுமார் 192 நாடுகளுக்கு சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்துபவர்கள் விசா இன்றி செல்லலாம். இந்த எண்ணிக்கையானது இந்திய பாஸ்போர்ட்டை கொண்டிருப்போருக்கு 57 ஆகும். அதாவது இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம். இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு இந்தோனேஷியா, தாய்லாந்து, ருவாண்டா, ஜமைக்கா மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்கு விசா-ஃப்ரீ அக்சஸ் மற்றும் விசா-ஆன்-அரைவல் அக்சஸ் இருந்தாலும் கூட, உலகம் முழுவதும் 177 இடங்களுக்குள் நுழைவதற்கு இன்னும் விசா தேவைப்படுகிறது. இந்த நாடுகளில் சீனா, ஜப்பான், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்டவை அடங்கும்.
Henley Passport Index பட்டியலில் ஐந்தாண்டுகள் முதலிடத்தில் இருந்த ஜப்பானின், விசா இல்லாமல் பாஸ்போர்ட் அணுகக்கூடிய நாடுகளின் எண்ணிக்கை குறைந்ததால் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்த பட்டியலில் ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கு முன்பு முதலிடத்தில் இருந்த அமெரிக்கா, தற்போது இரண்டு இடங்கள் சரிந்து 8-வது இடத்திற்கு வந்துள்ளது. ஜப்பானிய குடிமக்கள் மொத்தம் 189 நாடுகளில் விசா இல்லாமல் நுழையலாம். அதே நேரம் அமெரிக்க பாஸ்போர்ட் மூலம், உலகின் மொத்தம் 184 நாடுகளில் விசா இல்லாமல் நுழையலாம்.
உலகின் பலவீனமான பாஸ்போர்ட் எது.?
ஆப்கானிஸ்தானின் பாஸ்போர்ட் உலகின் பலவீனமான பாஸ்போர்ட் ஆகும். ஆப்கானிஸ்தானை தொடர்ந்து பலவீனமான பாஸ்போர்ட் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஈராக் மற்றும் சிரியா இருக்கின்றன. நம் அண்டை நாடான பாகிஸ்தான் உலகின் பலவீனமான பாஸ்போர்ட் கொண்டுள்ள நாடுகளில் 4-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் பாஸ்போர்ட் மூலம் 33 நாடுகளில் மட்டுமே விசா இன்றி நுழைய முடியும். இந்த பட்டியலில் ஏமன், சோமாலியா நாடுகளும் உள்ளன.