லட்சங்களை இழந்த டெக்கி.. ரூ. 700 கோடி சுருட்டிய மோசடி கும்பலை தட்டித்தூக்கிய போலீசார்
24 Jul,2023
அப்பாவி பொதுமக்களை யூடியூப் மற்றும் முகநூல் மூலம் தொடர்பு கொண்டது இந்த கும்பல், சீனாவை சேர்ந்த 3 பேர் இதில் தொடர்புடையவர்கள். ஐதராபாத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சிவா ஆன்லைனில் ரூ.28 லட்சம் இழந்ததாக போலீசிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக, ஐதராபாத் போலீசின் சைபர் கிரைம் பிரிவினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், சீனாவை பின்புலமாக கொண்டு இயங்கும் ஒரு கும்பல் செய்த ரூ.700 கோடி அவரை மோசடி செய்துள்ளது தெரிய வந்தது. இது சம்பந்தமாக 9 பேரை கைது செய்திருக்கிறது. இந்த மோசடியின் ஒரு பகுதி பணம் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பிற்கும் பரிமாற்றம்
செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், சீனாவை மையமாக கொண்டு செயல்பட்ட கெவின் ஜுன், லூ லேங்க்ஷோ மற்றும் ஷாஷா எனும் 3 பேரின் தொடர்பில் இந்தியாவில் சிலரின் துணையோடு இந்த கும்பல் செயல்பட்டிருக்கிறது. அப்பாவிகளுக்கு இணையதளத்தில் சில சிறு சிறு வேலைகளை முடித்து கொடுக்க சொல்லி அதன் மூலம் மோசடியை செயலாக்கியிருக்கிறது.
கைது செய்யப்பட்டவர்களில் பிரகாஷ் பிரஜாபதி மற்றும் குமார் பிரஜாபதி எனும் அகமதாபாத் நகரை சேர்ந்த இருவர்தான் இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டிருக்கிறார்கள். பல போலி நிறுவனங்களின் பெயரில், 48 வங்கி கணக்குகளில் ரூ.584 கோடி செலுத்தப்பட்டுள்ளது. தொடர் விசாரணையில் மேலும் ரூ.128 கோடி பல வங்கி கணக்குகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்யப்பட்டதும் தெரிய வந்தது. சுமார் ரூ.700 கோடிக்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடியில் அப்பாவி பொதுமக்களை யூடியூப் மற்றும் முகநூல் மூலம் தொடர்பு கொண்ட இந்த கும்பல், சில எளிதான இணைய வேலைகளை செய்து தந்தால் நிறைய பணம் கிடைக்கும் என நம்ப வைத்துள்ளனர். ஆரம்பத்தில் அவர்களுக்கு சிறிய அளவில்
பணத்தையும் கொடுத்திருக்கின்றனர். பகுதி நேர ஊதியமாக கருதி பலர் இதில் இறங்கியுள்ளனர். சிறு அளவில் பணத்தை முதலீடு செய்தால் மிக நல்ல வருவாய் வரும் என ஆசை காட்டியுள்ளனர். இதனை நம்பிய பலரும் பணத்தைச் செலுத்தியுள்ளனர். குறைந்த பட்சமாக ரூ.5 லட்சம் தொடங்கி பல லட்சம் மோசடி செய்துள்ளனர் என தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மேலும் பலரை ஐதராபாத் காவல்துறை தேடி வருகிறது என தெரிவித்தனர்.