இந்திய நாணயத்தை பொது நாணயமாக பயன்படுத்த இலங்கை தயார்... அதிபர் ரணில்
17 Jul,2023
தற்போது வரை சர்வதேச சந்தையில் பண்டங்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் பொது நாணயமாக அமெரிக்க டாலர் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்க ஆதிக்கத்தை குறைப்பதற்காக டாலருக்கு எதிராக மாற்று நாணயங்களை கொண்டு வர பல நாடுகளும் முயன்று வருகின்றன.
அந்த வகையில் சில மாதங்களுக்கு முன் இந்தியா தனது இந்திய ரூபாயை அந்நிய செலவாணிக்கு பயன்படுத்த உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தது. மலேசியா, ரஷியா, உகாண்டா, ஓமான், இலங்கை உள்பட 18 நாடுகள் ரூபாயை பொது நாணயமாக பயன்படுத்த ஒப்புக்கொண்டன.
இதனை அடுத்து இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே அடுத்த வாரத்தில் 2 நாட்கள் இந்தியாவிற்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பயணத்தின்போது அவர் இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி மன்றத்தில் உரையாற்றும் போது ஒரு முக்கிய கருத்தை தெரிவித்தார்.
அதில் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயை பயன்படுத்தப்படுவதை இலங்கை காண விரும்புவதாகவும் பொது நாணயமாக இந்திய ரூபாயை பயன்படுத்த இலங்கை தயார் என்றும் அதிபர் ரணில் விக்கிரமசிங்க தனது உரையின்போது தெரிவித்துள்ளார்.மேலும் அவர் பேசும்போது, "ஜப்பான், கொரியா மற்றும் சீனா போன்ற நாடுகள் உட்பட கிழக்கு ஆசியா நாடுகள் 75 ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டது போல், இப்போது இந்தியப் பெருங்கடல் பகுதியுடன் சேர்ந்து இந்தியா வளர்ச்சி அடையும் காலம் இது " என்று விக்கிரமசிங்க கூறியுள்ளார்.