நான் முதல்வரானால்.. மீனவர்கள் கையில் வெடிகுண்டு கொடுத்து அனுப்புவேன்.. சீமான் சர்ச்சை பேச்சு
11 Jul,2023
தமிழக முதல்வராக நான் பதவியேற்றால் மீனவர்கள் கையில் வெடிகுண்டு கொடுத்து அனுப்புவேன் என்று சீமான் பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.
இலங்கை தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அரசியல் தலைவர்களில் சீமானுக்கு முக்கிய இடம் உண்டு. மறைந்து போன விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனையே தனது தலைவர் என்று சீமான் இன்றளவும் கூறி வருகிறார். மேலும், இலங்கை ராணுவத்துக்கு எதிராக விடுதலை புலிகள் இயக்கத்தினர் ஆயுதப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் வேளையில், தான் பிரபாகரனை சந்தித்ததாகவும், அவருடன் உணவு உண்டதாகவும் பல விஷயங்களை சீமான் பேசியுள்ளார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் ராமநாதபுரத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை வகித்து சீமான் பேசுகையில், "நமது தமிழக மீனவர்கள் மீது சிங்கள ராணுவத்தினர் தாக்குதல் நடத்துவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எங்கள் மீனவன் தினந்தோறும் சிங்கள ராணுவத்தினரால் தாக்கப்பட்டும், கொல்லப்பட்டு வருகிறான். நான் மட்டும் தமிழக முதல்வராக பதவியேற்றால் மீனவர்கள் கடலுக்கு செல்லும் போது அவர்கள் கையில் வெடிகுண்டுகளை கொடுத்து அனுப்புவேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி நிற்க திட்டமிட்டுள்ளாராம். அதனால்தான் நாம் தமிழரின் பொதுக்கூட்டத்தை இங்கே நடத்தினோம்" எனப் பேசினார்.
இதனிடையே, சீமானின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு ஆதரவும், கண்டனங்களும் குவிந்து வருகின்றன.