ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மூலம் கல்லா கட்டும் தனியார் மருத்துவமனைகள் - களத்தில் இறங்கி அதிரடி காட்டிய அதிகாரி
05 Jul,2023
கரூர் மாவட்டத்தில் விபத்தில் சிக்கிய நபரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கரூர் மாவட்ட வருவாய் அலுவலராக சூர்யபிரகாஷ் பணியாற்றி வருகிறார். இவர் அலுவல் வேலையாக அரவக்குறிச்சி சாலையில் பயணித்திருக்கிறார். அப்போது, இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு இளைஞரை அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு சென்றிருக்கிறது. அதை பார்த்ததும் பதறிப்போன டி.ஆர்.ஓ. சூர்யபிரகாஷ், உடலில் பலத்த காயமடைந்த நிலையில் கிடந்த அந்த இளைஞரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க, அங்கிருந்து 108 ஆம்புலன்ஸூக்கும், கரூர் அரசு மருத்துவமனைக்கும் தகவல் அளித்துள்ளார். உடனடியாக கரூரில் இருந்து 108 ஆம்புலன்ஸூம் வந்திருக்கிறது.
சம்பவ இடத்தில் ஆபத்தான நிலையில் இருந்த அந்த இளைஞரை ஆம்புலன்ஸில் ஏற்றுவதுவரை பார்த்துவிட்டு, ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம், 'கரூர் அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து விட்டேன். மருத்துவர்கள் தயாராக இருக்கிறார்கள். சீக்கிரம் அங்க இவரை கொண்டு போயிருங்க' என்று சூர்யபிரகாஷ் சொல்லி இருக்கிறார். அதற்கு சரியென தலையாட்டிய அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர், விபத்தில் காயமடைந்த இளைஞரைக் கொண்டு போனது கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு. அங்கு அந்த இளைஞருக்குச் சிகிச்சை அளித்த பின், அவரது உறவினர்களிடம் பில் தொகையைக் கூற, அவர்கள் கலங்கி போயிருக்கிறார்கள்.
இந்தத் தகவல் டி.ஆர்.ஓ. சூர்யபிரகாஸூக்கு தெரியவந்ததைத் அடுத்து தனியார் மருத்துவமனைக்கு போன் போட்டு,"அந்த இளைஞரிடம் ஒருரூபாய் கூட வாங்கக் கூடாது. இனிமேல் இதுபோல் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை வைத்து, உங்களுக்கு ஆள் பிடிக்க கூடாது. மீறி செய்தால், மருத்துவமனை அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என்று அழுத்தி சொல்லி இருக்கிறார். இன்னொரு பக்கம், அந்த ஆம்புலன்ஸை காவல்துறையை விட்டு, மடக்க சொன்னவர், அந்த ஓட்டுநரை இடைநீக்கம் செய்ய வைத்திருக்கிறார். "இனி இந்த மாவட்டத்தில் இப்படி ஒரு பித்தலாட்டம் நடக்காது. நடக்க விடமாட்டேன்" என்று டி.ஆர்.ஓ சூர்யபிரகாஷ் உறுதி அளித்துள்ளார்.