பச்சைப் பாம்பு கண்ணை குத்தும், புற்றுகளில் நாம் ஊற்றும் பாலை பாம்புகள் குடிக்கும், கொம்பேறி மூக்கன், தான் கொன்ற மனிதனின் பிணம் சுடுகாட்டில் எரிக்கப்படுவதை மரமேறி பார்த்து உறுதிப்படுத்திக்கொள்ளும், மகுடி இசைக்கு ஏற்ப பாம்புகள் படமெடுத்து நடனமாடும் (பாம்புகளுக்கு அதிர்வுணர்வு மட்டும்தான், கேட்கும் திறன் இல்லை), நல்ல பாம்பும், சாரைப் பாம்பும் டூயட் பாடி ஆடும், வயதான நல்ல பாம்பின் தலையில்தான் மாணிக்கம் உருவாகிறது, மண்ணுளிப் பாம்புக்கு 2 தலை, நல்ல பாம்பை கொன்றுவிட்டால், அதன் ஜோடி மனிதனை தேடிப்பிடித்து பழிவாங்கும் என்பதெல்லாமே வெறும் மூடநம்பிக்கைகள்தான்.
இந்தியாவைப் பொறுத்தவரை சுமார் 275 பாம்பு வகைகள் வசிக்கின்றன. இவற்றில் ஏறத்தாழ 60 பாம்பு வகைகளுக்குதான் விஷம் உண்டு. மீதியெல்லாம் விஷம் விஷயத்தில் ஒப்புக்குச் சப்பாணிதான். நம் வீடுகளில் இருக்கும் பல்லிகளுக்கும், இவற்றுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. விஷமிருக்கும் வகைகளில் நல்ல பாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன் மற்றும் சுருட்டை விரியன் ஆகிய 4 வகைகளால் தான் பாம்புக்கடி உயிரிழப்பு பெரும்பாலும் நம் நாட்டில் ஏற்படுகிறது.
விஷமற்ற பாம்பு கடித்தாலே கூட நிறைய பேர் அச்சமடைந்து ரத்த அழுத்தம் தாறுமாறாக ஏறி மாரடைப்பால் மரணமடைகின்றனர்.
கண்ணாடி விரியன் தவிர்த்து மற்ற வகை பாம்புகள், மனித நடமாட்டத்தை கண்டால் அஞ்சி ஓடி ஒளிந்துவிடும். நமக்கு பாம்புகள் மீது இருக்கும் பயத்தை காட்டிலும், பாம்புகளுக்கு நம் மீது பயம் அதிகம். விரியன் வகை பாம்புகள் நம்மைக் கண்டால் ஓடி ஒளியாமல் அதே இடத்தில் சுருண்டுக் கொள்ளும். அதற்கு அச்சுறுத்தல் என்றால் மட்டுமே தாக்க முயலும்.
குப்பைக்கூளம், கற்குவியல், மரத்துண்டுகள் குவிந்துக் கிடக்கும் இடங்களே பாம்புகளின் வசிப்பிடங்கள். நம் வீட்டின் சுற்றுப்புறம் தூய்மையாக இருந்தால், பாம்புகள் வராது.
பாம்பும் சட்டமும்
இந்திய வனப்பாதுகாப்புச் சட்டம் 1972ன் படி சாரைப்பாம்பு, தண்ணீர் பாம்பு, நல்ல பாம்பு, அரிய உயிரினமாகிவிட்ட ராஜநாகம் ஆகியவை பாதுகாக்கப்பட்ட வகைகள். இவற்றை கொல்வது, வீட்டில் வளர்ப்பது, துன்புறுத்துவது போன்றவை 1 முதல் 6 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படக்கூடிய கடுமையான குற்றங்கள்.
இதற்காக மற்ற பாம்புகளை அடித்துக் கொல்லலாமா என்றால் அதுவும் கூடாது. வனச்சட்டம் பாம்புகளுக்கு ஆதரவாகவே இருக்கிறது. இந்த உலகில் நாம் வாழ்வதற்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அதே அளவு உரிமை பாம்புகள் உள்ளிட்ட எல்லா உயிரினங்களுக்கும் இருக்கிறதுதானே” என கூறினார்.