கனடாவில் வேலைவாய்ப்பு... இது மட்டும் இருந்தால் போது..!
28 Jun,2023
கனடா புது விசா திட்டம்கனடா புது விசா திட்டம்
அமெரிக்காவின் எச்1பி விசா வைத்திருக்கும் நபர்கள் தங்கள் நாட்டிலும் வந்து பணிபுரியலாம் என்ற புதிய திட்டத்தை கனடா அறிமுகப்படுத்தியுள்ளது.
வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் வந்து பணியாற்றுவதற்கு அந்நாட்டு அரசு எச்1பி விசாவை வழங்கி வருகிறது. இந்த எச்1பி விசா மூலமாக கணிசமான இந்தியர்கள் அமெரிக்காவின் பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.
சமீப காலமாக பொருளாதார மந்த நிலையால் பலர் வேலை இழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். பல நிறுவனங்கள் அதிரடி ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டன. இந்நிலையில், அமெரிக்காவின் அண்டை நாடான கனடா எச்1பி விசா தொடர்பாக இந்தியர்களுக்கு சாதகமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க அரசு வழங்கும் எச்1பி விசா வைத்திருக்கும் 10,000 பேர் தங்கள் நாட்டில் வந்து பணிபுரியும் வாய்ப்பை கனடா வழங்குகிறது. இதற்காக Open Work Permit Stream என பணி அனுமதியை வழங்குவதாக அந்நாட்டு அமைச்சர் ஷான் ஃப்ரேசர் தெரிவித்துள்ளார்.
வரும் ஜூலை 16ஆம் தேதி முதல் இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வரும் எனவும், எச்1பி விசா வைத்திருப்பவர்கள் 3 ஆண்டுகள் கனடாவில் பணிபுரியலாம். அவர்களின் நேரடி குடும்ப உறுப்பினர்களும் வேலை அல்லது கல்வி நிமித்தமாக உடன் தங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த விசா விண்ணப்பம் குறித்த விரிவான நெறிமுறைகள் இன்னும் வெளியாகவில்லை. உலகின் தலை சிறந்த திறமையாளர்கள் தங்கள் நாட்டில் வந்து பணிபுரிய ஏதுவாக குடியேற்ற விதிகள் இந்தாண்டுக்குள் உருவாக்கப்படும் என கனடா அரசு தெரிவித்துள்ளது.
இந்தியர்கள் பலர் எச்1பி விசா வைத்திருக்கும் நிலையில் அமெரிக்காவில் வாய்ப்பு கிடைக்காவர்களும், கனடாவில் சிறந்த வாய்ப்பை பெறுபவர்களும் இந்த திட்ட்தை பயன்படுத்தி கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.