கோவையில் மின் மயானத்தில் சடலத்தின் மீது அமர்ந்து அகோரி ஒருவர் பூஜை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள குரும்பபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு 40 வயதாகிறது. இவர் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இந்த நிலையில் மனைவியுடன் மணிகண்டனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும் கடந்த 2 மாதங்களாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் குடும்ப பிரச்சினையால் மனமுடைந்த மணிகண்டன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து மணிகண்டனின் உடலை கைப்பற்றிய போலீஸார் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவரது உடலுக்கு உறவினர்கள் இறுதி சடங்குகளை செய்ய மின் மயானத்திற்கு கொண்டு சென்றனர்.
அப்போது அங்கு உறவினர்களுடன் 8 அகோரிகள் வந்தனர். அவருடன் சிறு வயது முதலே நண்பராக பழகிய திருச்சி அகோரி மணிகண்டனும் இந்த இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றார்.
சடலத்தை ஆம்புலன்ஸ் வேனில் இருந்து இறக்கியதும் உடுக்கை வாசித்து மந்திரங்களை அகோரிகள் ஓதினர். மணிகண்டன் உடலுக்கு தீ வைப்பதற்கு முன்னர் அந்த சடலத்தின் மீது அகோரி மணிகண்டன் அமர்ந்து பூஜைகளை செய்தார். அப்போது மற்ற அகோரிகள் சிவபூஜையை செய்தனர்.
இதன் பின்னர்தான் இறந்த மணிகண்டனின் சடலம் எரியூட்டப்பட்டது. இறந்த அகோரி மீது அகோரி ஒருவர் அமர்ந்து கொண்டு பூஜை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது போல் காசியில்தான் செய்வார்களாம். ஆனாலும் இது போன்றதொரு பூஜையில் உறவினர்களிடம் சம்மதம் கேட்ட பிறகே சடலத்தின் மீது ஏறி அமர்ந்ததாக அகோரி தரப்பும் மின் மயான ஊழியர்களும் தெரிவிக்கிறார்கள்.
வடமாநிலங்களை போல் அகோரி மணிகண்டன் அகோரி பூஜை நடத்தி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உடலில் ஆடை அணியாமல் கையில் எலும்புகளுடன் உடல் முழுவதும் திருநீறு பூசி சுடுகாடுகளில் அருகே உள்ள பகுதிகளில் அகோரிகள் வசிப்பார்கள்.
இது வடமாநிலங்களில் நடக்கும். ஆனால் தமிழகத்தில் திருச்சியில் அரியமங்கலத்திலும் சுடுகாட்டில் அகோரி பூஜை நடந்தது.
விபத்தில் இறந்த ஒருவரது சடலத்தின் மீது மணிகண்டன் ஏறி அமர்ந்து ஜென்ம சாந்தி பூஜை நடத்தினார்.
சங்கு ஒலி எழுப்பியும் டமரா மேளம் அடித்தும் பூஜையில் ஈடுபட்டனர். காசிக்கு சென்று திரும்பிய மணிகண்டன் அகோரி பூஜைகளை கற்றுக் கொண்டு அரியமங்கலத்தில் அகோர காளி சிலையை வைத்து வழிபட்டு வருகிறார்.
உயிரிழந்தவர் இவரிடம் சிஷ்யராக இருந்ததாகவும், அதன் காரணமாகவே குடும்பத்தினர் அனுமதித்ததாகவும், கூறப்படுகிறது