இந்தியாவில் பரவி வரும் H3n2 இன்புளூயன்சா காய்ச்சலுக்கு இருவர் உயிரிழப்பு!
10 Mar,2023
H3n2 இன்புளூயன்சா வைரஸ் உட்பட பல்வேறு வகையான காய்ச்சலால் மார்ச் 9-ம் தேதி வரை 3,038 பேர் இந்தியாவில் பதிப்புக்குள்ளாகியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சக தகவலின்படி, கடந்த பிப்ரவரி 28-ம் தேதி வரை மொத்தம் 955 H1N1 நாடு முழுவதும் இன்புளூயன்சா வைரஸ் பதிவாகியுள்ளன. பெரும்பாலான H1N1 வைரஸ் பாதிப்புகள் தமிழ்நாடு (545), மகாராஷ்டிரா (170), குஜராத் (74), கேரளா (42) மற்றும் பஞ்சாப் (28) ஆகிய மாநிலங்களில் பதிவாகியுள்ளன.
மேலும் கடந்த ஜனவரியில் 1245 பாதிப்புகளும், பிப்ரவரியில் 1307 பாதிப்புகளும், மார்ச் 9 வரை 486 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன. பல்வேறு மாநிலங்களில் பருவகால காய்ச்சல் நிலைமையை மத்திய சுகாதார அமைச்சகம் உண்ணிப்பாக கண்காணித்து வருகிறது.
பருவகால காய்ச்சலின் H3N2 வகை காரணமாக ஏற்படும் நோயின் தன்மையை உண்ணிப்பாக கண்காணித்து வருவதாகவும், பருவகால காய்ச்சலில் குழந்தைகள் மற்றும் முதியோர்கள், இணை நோயுடையவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கர்நாடகா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் H3N2 காய்ச்சலால் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். பருவகால காய்ச்சலால் ஏற்படும் பாதிப்புகள் மார்ச் மாத இறுதியில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதனை எதிர்கொள்ள மாநில கண்காணிப்பு அதிகாரிகள் முழுமையாகத் தயாராக உள்ளனர்.