சென்னையில் நில அதிர்வு காரணமாக அலுவலக கட்டிடங்கள் குலுங்கியதால்
22 Feb,2023
சென்னையில் நில அதிர்வு காரணமாக அலுவலக கட்டிடங்கள் குலுங்கியதால் ஊழியர்கள் அலறியடித்து வெளியேறினர்.
சென்னை, சென்னை அண்ணாசாலையில் அருகே உள்ள ஒயிட்ஸ் சாலையில் வங்கி மற்றும் 2 கட்டிடங்களில் நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அண்ணாநகரிலும் சில இடங்களில் உள்ள கட்டிடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால் ஊழியர்கள் வெளியேறினர். சென்னை அண்ணா சாலையில் உள்ள கட்டிடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நில அதிர்வு குறித்து தேசிய மையத்தின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக எதுவும் பதிவாகவில்லை. சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில் தங்களது பணிகள் காரணமில்லை என மெட்ரோ ரெயில் ரெயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
image
எதிர்காலத்தில் இமயமலைப் பகுதியில் கடுமையான சேதத்தை உண்டாக்கும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் (என்ஜிஆர்ஐ) கணித்துள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட தொடர் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால், அந்நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 45,000- கடந்துள்ளது. தொடர்ந்து இந்தோனேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும், அசாம், ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இமயமலைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் (என்ஜிஆர்ஐ) கணித்துள்ளது. இதுகுறித்து பேசிய என்ஜிஆர்ஐ-ன் தலைமை விஞ்ஞானி பூர்ணசந்திர ராவ், ”பூமியின் மேற்பரப்பில் தொடர்ந்து இயக்கத்தில் இருக்கும் பல்வேறு டெக்டானிக் தட்டுகள் உள்ளன. இந்திய டெக்டானிக் தட்டு ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஐந்து சென்டிமீட்டர்கள் நகர்கிறது. இதனால் இமயமலைப் பகுதியில் ஒரு விதமான அழுத்தங்களும் அதிர்வுகளும் உருவாகின்றன.
உத்தரகாண்டில் 18 நில அதிர்வு ஆய்வு மையங்கள் அமைந்துள்ளன. அவை தரும் தகவல்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். உத்தரகாண்ட் உட்பட ஹிமாச்சல் மற்றும் நேபாளத்தின் மேற்குப் பகுதிக்கு இடையே உள்ள நில அதிர்வுப் பகுதியில், எந்த நேரத்திலும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு நிலநடுக்கங்கள் ஏற்பட்டால், அவை ரிக்டர் அளவில் 8 வரை பதிவாகும்.
நிலநடுக்கத்தை தடுக்க முடியாது, ஆனால் அதனால் ஏற்படும் இழப்புகளை தடுக்க முடியும். நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள இந்த பகுதிகளில், கட்டடங்கள் கட்டுவதற்கு இந்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அந்த வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.