மத்திய பட்ஜெட்டை விளாசிய அரவிந்த் கெஜ்ரிவால்!
02 Feb,2023
இதுதவிர, மத்திய பட்ஜெட்டில் நாட்டுக்கு நன்மை பயக்கும் விஷயங்கள் ஒன்று கூட இல்லை என்றும் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது என்பதால் இந்த பட்ஜெட்டில் பல சலுகைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே, பல சலுகைகள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, வருமான வரி உச்ச வரம்பு ரூ.7 லட்சமாக அறிவிக்கப்பட்டது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது ஒருபுறம் இருக்க, இந்த பட்ஜெட் தேர்தலை கருத்தில்கொண்டு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும், பணவீக்கம், வேலைவாய்ப்பு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் அறிவிப்புகள் ஏதும் இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், இந்த பட்ஜெட்டை டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் காரசாரமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: டெல்லி மக்களிடம் இருந்து மத்திய அரசுக்கு கடந்த நிதியாண்டில் வருமான வரியாக மட்டும் ரூ.1.75 லட்சம் கோடி கிடைத்துள்ளது. ஆனால், டெல்லி மக்களுக்காக மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்திருக்கும் தொகை எவ்வளவு தெரியுமா? ரூ.325 கோடி. எங்களிடம் இருந்து ரூ.1.75 லட்சம் கோடியை பெற்றுக்கொண்டு, வெறும் ரூ.325 கோடியை தருவது எவ்வகையில் நியாயம்?
இது இன்று நேற்று அல்ல. ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தது முதலாகவே டெல்லியை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தான் மத்திய பாஜக அரசு நடத்துகிறது. இந்த பட்ஜெட் முழுக்க முழுக்க டெல்லி மக்களுக்கு அநீதி இழைக்கும் பட்ஜெட் ஆகும். ஒரு யூனியன் பிரதேசத்தில் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள 325 கோடி ரூபாய் போதுமானதா? இந்த தொகையை வைத்து டெல்லி மக்களுக்கு எப்படி நலத்திடங்களை செய்ய முடியும்?
டெல்லியை தவிர்த்துவிட்டு பார்த்தால் கூட இந்த பட்ஜெட்டால் நாட்டுக்கு எந்த பலனும் இல்லை. பணவீக்கமும், வேலைவாய்ப்பு இன்மையும் இன்று நாட்டில் தலைவிரித்தாடுகிறது. ஆனால், இவற்றுக்கு எந்த தீர்வும் இந்த பட்ஜெட்டில் இல்லை. இன்னும் சொல்லப்போனால், பணவீக்கத்தை அதிகரிக்கும் பட்ஜெட்டாகவே உள்ளது. கல்விக்கான நிதி ஒதுக்கீடு 2.64 சதவீத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறைக்கு 2.2 சதவீதத்தில் இருந்து 1.98 சதவீதமாக நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. இது நாட்டு மக்களுக்கு மிகவும் ஆபத்தானது. இவ்வாறு தனது பதிவில் கெஜ்ரிவால் கூறியுள்ளார்