அபுதாபி அரச குடும்ப ஊழியராக காட்டிக்கொண்ட நபர், 23 இலட்சம் இந்திய ரூபா ஹோட்டல் பில்லை செலுத்தாமல் தலைமறைவு
20 Jan,2023
டெல்லியிலுள்ள 5 நட்சத்திர ஹோட்டலொன்றில் 4 மாதங்கள் தங்கியிருந்த ஒரு நபர், 23 இலட்சம் இந்திய ரூபா (சுமார் ஒரு கோடி இலங்கை ரூபா) கட்டணத்தை செலுத்தாமல் தலைமறைவாகியுள்ளார் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நபர், டெல்லியிலுள்ள லீலா பலஸ் ஹோட்டலில் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் திகதி தங்கு ஆரம்பித்தார்.
தன்னை அபுதாபி அரச குடும்பத்தின் ஊழியராகக் காட்டிக் கொண்டிருந்தாராம். அபுதாபி அரச குடும்பத்தின் ஷேக் ஃபலா பின் ஸெயீட் அல் நெஹ்யானுடன் தான் நெருக்கமாக செயற்பட்டதாகவும் அவர் கூறிக்கொண்டிருந்தாரம்.
4 மாதங்கள் மேற்படி ஹோட்டலில் தங்கியிருந்த அந்நபர், 23 இலட்சம் ரூபா கட்டணத்தை செலுத்தாமல் தலைமறைவாகிவிட்டார் என டெல்லி பொலிஸாரிடம் கடந்த சனிக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ அலுவல்களுக்hக தான் இந்தியாவுக்கு வந்ததாக கூறிய அந்நபர், தனது கதைக்கு வலுசேர்க்கும் வகையிலான ஆவணங்களையும் காண்பித்ததுடன், ஐக்கிய அரபு இராச்சியத்தில் தனது வாழ்க்கை குறித்து ஹோட்டல் ஊழியர்களுடன் அடிக்கடி உரையாடிவந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி ஆவணங்களை ஆராய்ந்த பொலிஸார் அவை போலியானவை என சந்தேகிக்கின்றனர்.
மேற்படி நபரின் 4 மாத கட்டணம் 35 இலட்சம் இந்திய ரூபாவாகும். அவர் 11.5 இலட்சம் ரூபாவை செலுத்திவிட்டு, ஹோட்டலிலிருந்து வெளியேறியுள்ளார் என ஹோட்டல் நிர்வாகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.