மதுரையில் உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழாவுக்கு அடுத்தாற்போல் புகழ் பெற்றது ஜல்லிக்கட்டு திருவிழா. தை முதல் நாள் அவனியாபுரத்தில் இந்த திருவிழா தொடங்கும். தை 2-வது நாளில் பாலமேட்டிலும், 3-வது நாளில் அலங்காநல்லூரிலும் விறுவிறுப்பாக நடைபெறும். அந்த வகையில் பாலமேடு ஜல்லிக்கட்டு விழா நேற்று நடந்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 350-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களம் கண்டனர். ஒவ்வொரு சுற்றுக்கும் தலா 25 மாடுபிடி வீரர்கள் வீதம் அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு சுற்றும் 45 நிமிடம் நடந்தது.
கோவில் காளைகள்
முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு காளைகளை அடக்கினர். அதிக காளைகளை அடக்கும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அடுத்தடுத்த சுற்றுகளில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் வாடிவாசலில் நின்று விளையாடும் சிறந்த காளைகளையும் மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வந்தது.
பரிசுகள்
காளைகளை அடக்கியவர்களுக்கு விழாக்குழு சார்பில் தங்கம், வெள்ளி நாணயங்கள், கட்டில், பீரோ, டி.வி. உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன. பல காளைகள் சீறிப்பாய்ந்து வாடிவாசலில் இருந்து வெளியேறி, பிடிபடாமல் பரிசுகளை தட்டிச்சென்றன. ஒரு சில மாடுகள் தன்னை நெருங்க விடாமல் சுழன்று சுழன்று வீரர்களை சிதறடித்தன.
சில மாடுகள் மைதானத்தை விட்டு வெளியேறாமல் அங்கேயே சுற்றி வந்தன. முக்கிய பிரமுகர்கள் வளர்க்கும் காளைகளை அடக்க வீரர்கள் போட்டி போட்டு முன்னே வந்தனர். ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்று இளம்பெண்கள் சிலர் தங்கள் காளைகளை போட்டிக்கு அழைத்து வந்தனர். அவை வெற்றி பெற்றதும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
மதுரை வாலிபர் முதல் இடம்
பரபரப்பாக நடந்து முடிந்த பாலமேடு ஜல்லிக்கட்டு விழாவில், மதுரை மாவட்டம் சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன் என்ற வாலிபர் 23 காளைகளை அடக்கி முதல் இடம் பிடித்தார். அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. 19 காளைகளை அடக்கி 2-ம் இடம் பிடித்த பாலமேடுவை சேர்ந்த மணி என்பவருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது. பாலமேடு ராஜா, 15 காளைகளை அடக்கி 3-ம் இடம் பெற்றார்.
அதேபோன்று போட்டியில் சிறப்பாக விளையாடி முதலிடம் பிடித்த மதுரை ரெங்கராஜபுரம் கருப்பண்ண சுவாமி கோவில் காளைக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது. 2-ம் இடத்தை திண்டுக்கல் ரமேஷ் காளை பிடித்தது. அவருக்கு கன்றுடன் பசுமாடு பரிசாக வழங்கப்பட்டது.
இந்த பரிசுகளை அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் அனிஷ்சேகர் உள்ளிட்டோர் இணைந்து வழங்கினார்கள்.
மாடு முட்டி வீரர் பலி
முன்னதாக பாலமேட்டைச் சேர்ந்த அரவிந்த்ராஜ் (வயது 26) என்பவர் அபாரமாக செயல்பட்டு காளைகளை அடக்கினார். இவர் 3 சுற்றுகள் வரை 9 மாடுகளை பிடித்து 3-ம் இடத்தில் இருந்து வந்தார்.
அந்த நேரத்தில் வாடிவாசலை விட்டு ஆவேசமாக வெளியேறி வந்த மாடு ஒன்று, வாசலின் வலதுபுறம் நின்று கொண்டிருந்த அரவிந்த்ராஜ் வயிற்றில் கொம்பால் குத்தி தூக்கி வீசியது. இதில் குடல்சரிந்து அவர் உயிருக்கு போராடினார்.
உடனே அவரை மருத்துவக்குழுவினர் மீட்டு, பாலமேடு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்று முதல் உதவி அளித்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் அவர் உயிரிழந்துவிட்டார்.
38 பேர் காயம்
மாடு முட்டியதில் வீரர்கள், மாடுகளின் உரிமையாளர்கள் உள்பட 38 பேர் காயம் அடைந்தனர்.
இந்த போட்டியின்போது டி-சர்ட்டை மாற்றி ஆள்மாறாட்டம் செய்ததாக 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
திருச்சியிலும் ஜல்லிக்கட்டு
இதேபோல் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பெரிய சூரியூரில் நற்கடல்குடி கருப்பண்ணசாமி கோவில் திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது.
இதில் 567 ஜல்லிக்கட்டு காளைகள் அழைத்து வரப்பட்டன. இதில் 315 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இந்த ஜல்லிக்கட்டில் 17 மாடுகளை அடக்கிய சூரியூரை சேர்ந்த பூபாலன் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு பரிசாக மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது.
வாலிபர் பலி-58 பேர் படுகாயம்
மாலை வரை நடந்த ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் 59 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். இதில் புதுக்கோட்டை மாவட்டம், களமாவூரை சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் அரவிந்த் (வயது 25) என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜல்லிக்கட்டு காளையுடன் துணைக்கு வந்த இவர் மைதானத்துக்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது, அவரை மற்றொரு மாடு முட்டியது குறிப்பிடத்தக்கது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
இதேபோல் பொங்கல் திருநாளான நேற்று முன்தினம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடந்தது. 11 சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டிகளில், 737 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 10 சுற்றுகளிலும் 3 மாடுகளுக்கு மேல் அடக்கிய வீரர்கள் மட்டும் இறுதிச்சுற்றில் பங்கேற்று காளைகளை அடக்கினர்.
காளைகள் முட்டியதில், மாடுபிடி வீரர்கள் உள்பட 61 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் போலீஸ்காரர், சிறுவன் உள்ளிட்ட 11 பேர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
சிறப்பாக விளையாடி 28 காளைகளை அடக்கிய மதுரை சோலையழகுபுரம் பகுதியை சேர்ந்த விஜய்க்கு முதல் பரிசாக ரூ.7 லட்சம் மதிப்பிலான கார் வழங்கப்பட்டது.
கலசபாக்கம்
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே கீழ்பாலூரில் நேற்று முன்தினம் காளை விடும் விழா நடந்தது. வேடிக்கை பார்க்க வந்த கார்த்தி (50) என்ற கூலித்தொழிலாளி மாடு முட்டி பரிதாபமாக இறந்தார்.