இனியொருபோதும் 'காஷ்மீர்' பயங்கரவாதிகளின் மையமாகாது
04 Jan,2023
2022ஆம் ஆண்டில் 22 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் ஜம்மு-காஷ்மீருக்கு வருகை தந்துள்ளனர். எனவே, இனியொருபோதும் ஜம்மு-காஷ்மீர் 'பயங்கரவாதிகளின் மையமாக' இருக்காது. மாறாக, 'சுற்றுலா மையமாக' மாறியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாயன்று வெளியிட்ட உள்துறை அமைச்சகத்தின் 2022 மதிப்பாய்வு அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்களின் எண்ணிக்கை 2018ஆம் ஆண்டில் 417ஆக காணப்பட்ட போதிலும், 2021ஆம் ஆண்டில் 229ஆக குறைந்துள்ளது.
முன்பு பயங்கரவாதிகளின் மையமாக இருந்த ஜம்மு-காஷ்மீர், இன்று சுற்றுலாப் பயணிகளின் மையமாக மாறியுள்ளது. இதற்கு முன் ஆண்டுக்கு அதிகபட்சமாக, 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். அதேவேளை இந்த ஆண்டு இதுவரை 22 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இதனால், ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, யூனியன் பிரதேசத்தில் உறுதியுடன் வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருவதால், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை.
பயங்கரவாத சம்பவங்களில் 54 சதவீதமும், பாதுகாப்புப் படையினரின் இறப்புகளில் 84 சதவீதமும், ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஆட்சேர்ப்பு செய்வதில் 22 சதவீதமும் குறைந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கான பிரதமரின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 80,000 கோடி ரூபா செலவில் சுமார் 63 நீர், மின்சார திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4,287 கோடி செலவில் கிரு திட்டத்தின் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.