இந்தியாவில் மெல்ல அதிகரிக்கும் கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை
28 Dec,2022
இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மெல்ல அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. புதுடெல்லி, சீனாவில் கொரோனா வைரசின் பிஎப் 7 ஒமைக்ரான் திரிபு வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளை விமான நிலையத்திலேயே கண்காணித்து ஆர்டிபிசிஆர் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வரும் பணிகள் சிலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு தொடர்பான விவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 188 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 77 ஆயிரத்து 647 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை,
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை மேலும் 47 அதிகரித்து 3 ஆயிரத்து 468 ஆக உள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 4 கோடியே 41 லட்சத்து 43 ஆயிரத்து 483 பேர் குணமடைந்துள்ளனர். அதேவேளை, வைரஸ் பாதிப்பால் இதுவரை 5 லட்சத்து 30 ஆயிரத்து 696 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் இதுவரை 220 கோடியே 7 லட்சத்து 34 ஆயிரத்து 218 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.