சீனாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிப்பது குறித்து
22 Dec,2022
கொரோனா தொற்று அச்சம் காரணமாக, சீனாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என, மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமான சீனாவில், கடந்த சில வாரங்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, சீனாவில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஒமைக்ரான் வைரஸ் தொற்றின் உருமாறிய பிஎப் 7 வகை தொற்று சீனாவின் தற்போதைய நிலைமைக்கு காரணம் என தெரிய வந்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று ருத்ர தாண்டவமாடி வருவது, உலக நாடுகளை மீண்டும் கலக்கம் அடையச் செய்துள்ளது.
இதற்கிடையே, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு அண்மையில் ஆலோசனை நடத்தியது. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விடும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் காரணமாக சீனாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
இந்தியாவில் இருந்து சீனாவிற்கும், சீனாவில் இருந்து இந்தியாவிற்கும் நேரடியாக விமானங்கள் இயக்கப்படவில்லை. எனவே, அங்கிருந்து வரும், இங்கிருந்து அங்கு செல்லும் விமானங்களுக்கு தடை விதிப்பது குறித்து இதுவைர எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்த விவகாரத்தில் இறுதி முடிவை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் எடுக்கும். அதனை விமான போக்குவரத்து துறை அமைச்சகம் செயல்படுத்தும். கொரோனா வைரஸ் பரவலை பொறுத்து இந்த விவகாரத்தில் மத்திய சுகாதாரத் துறை அடுத்த கட்ட முடிவை எடுக்கும்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.