தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களை சேர்ந்த 28 இளைஞர்களை ரயில்வேயில் வேலைக்கு பயிற்சி எனக் கூறி, ஒரு மாதமாக டெல்லி ரயில் நிலையத்தில் ரயில்களை எண்ண விட்டு ஏமாற்றிய சம்பவம் நடந்திருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரான சுப்புசாமி (78), டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அதில் டெல்லி ரயில் நிலையத்தில் பயணச் சீட்டு பரிசோதகர்கள், ரயில் போக்குவரத்து உதவியாளர்கள், எழுத்தர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி தமிழ்நாட்டைச் சேர்ந்த 28 பேரிடம் இருந்து சுமார் ரூ.2.67 கோடி வரை பண மோசடி செய்து விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த புகாரில் தமிழ்நாட்டின் மதுரை, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த பலர் ரயில்வே துறையில் வேலைக்காக ரூ.2 லட்சம் ரூபாய் முதல் ரூ.24 லட்சம் வரை பணம் கொடுத்து ஏமாந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மோசடி நடந்தது எப்படி?
பிடிஐ செய்தி முகமையுடன் தொலைபேசியில் பேசிய ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான சுப்புசாமி, தனது பகுதியில் வசிக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு அரசு வேலைக்கான விளம்பரங்களை பகிர்வது, அரசு வேலை பெற உதவுவது என பல்வேறு உதவிகளை செய்து வந்தேன். அப்படி செய்து வரும் போது, கோவையை சேர்ந்த சிவராமன் என்பவர் தனக்கு அறிமுகம் ஆனதாக கூறினார். சிவராமன் டெல்லியில் உள்ள எம்பி குடியிருப்பில் வசித்து வருவதாகவும், பல்வேறு துறை அமைச்சர்களுடன் தனக்கு நெருக்கம் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் ரயில்வே துறையில் தனக்கு தெரிந்த உயர் அதிகாரிகளை அணுகி, வேலை பெற்றுத்தர உதவுவதாக உறுதி அளித்துள்ளார். அதனை நம்பி முதல் கட்டமாக 3 பேருக்கு வேலையை பெற்றுத்தர டெல்லிக்கு வந்து சிவராமனை சந்தித்துள்ளார் சுப்புசாமி.
சிவராமன் மூலமாக சுப்புசாமிக்கு, டெல்லியில் உள்ள வடக்கு ரயில்வேயின் உதவி இயக்குநர் என்று கூறிக்கொண்டு அறிமுகமாகியுள்ளார் விகாஸ் ராணா. அவர் முதல் கட்டமாக அழைத்து வரப்பட்ட 3 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்குவதாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் தமிழகத்தில் விருதுநகர், மதுரை மாவட்டங்களை சேர்ந்த பலருக்கும் தெரியவர மேலும் 25 பேர் வேலைக்காக சுப்புசாமியிடன் பணம் கொடுத்துள்ளனர்.
பணம் கொடுத்த 28 பேருக்கும் முதல் கட்டமாக டெல்லி கன்னாட் பிளேஸ் (Connaught Place) பகுதியில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடைபெற்று இருக்கிறது. அதைத் தொடர்ந்து டெல்லி சங்கர் மார்கெட் பகுதியில் உள்ள வடக்கு ரயில்வேயின் இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடந்துள்ளன. இந்த பணிக்காக விண்ணப்பித்த 28 பேரில் பெரும்பாலானோர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி முடித்தவர்கள். மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் முடிந்த பிறகு 28 பேரையும் அழைத்து கொண்டு, ரயில்வே உயர் அதிகாரி என்று கூறிய விகாஸ் ராணேவும் அவரது கூட்டாளியான தூபேவும் டெல்லியில் உள்ள பரோடா ஹவுஸிற்கு அழைத்து சென்று, பயிற்சிக்கான பணியாணையை வழங்கி அதனுடன் பயிற்சி கையேடும் வழங்கியுள்ளனர். பயிற்சி முடிந்த பிறகு வேலைக்கான பணியாணையை வழங்குவதாக ராணாவும் அவரது கூட்டாளியான தூபேவும் உறுதி அளித்துள்ளனர். பயிற்சிக்கான ஆனையை பெற்றுக்கொண்ட 28 பேரில் ஒருவரான மதுரையை சேர்ந்த செந்தில் குமார் கூறும் போது, "தினசரி 8 நேரம் டெல்லி ரயில் நிலையத்தில் பயிற்சியில் ஈடுப்பட்டதாகவும், அங்கு இருக்கும் மற்ற ரயில் நிலைய அதிகாரிகளிடம் இந்த தகவலை தெரிவிக்கக் கூடாது என்று தங்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தன," என பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
கடந்த ஜூன் முதல் ஜூலை மாதம் வரை ஒவ்வொரு நடைமேடைக்கும் தினசரி வந்து செல்லும் ரயில்கள் மற்றும் அவற்றின் பெட்டிகளை 8 மணி நேரம் எண்ணியதாகவும் அவர் கூறினார். பயிற்சிக்கு பின்னர் விகாஸ் ராணவை சந்திக்க அவரது அலுவலகம் செல்லும் போது சந்தேகம் ஏற்பட்டது. பணம் பெற்றது முதல், பயிற்சிக்கான ஆணை வழங்கியது வரை ஒவ்வொரு முறையும் ராணாவை சந்திக்கச் செல்லும் போது ரயில்வே துறையின் அலுவலகத்துக்கு வெளியே வைத்தே தமிழக இளைஞர்களை பார்த்திருக்கிறார். இதனால் ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் அவர் வழங்கிய சான்றிதழ்களை சரிபார்த்த போது, 28 பேருக்கும் போலி பணியாணைகள் வழங்கப்பட்டு ஏமாற்றப்பட்டதை உணர்ந்தாக அவர் தெரிவித்தார். உடனடியாக சுப்புசாமியிடம் தகவலை தெரிவித்த பிறகு அவர் மூலமாக காவல்துறையிடம் புகார் அளிக்க 'ஏமாற்றப்பட்ட இளைஞர்கள்' முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவில் சுப்புசாமி அளித்த புகாரில் ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 28 பேரிடம் ரூ. 2.67 கோடி ரூபாய் பெற்று விகாஷ் ராணாவும் அவரது கூட்டாளிகளும் ஏமாற்றி விட்டதாக கூறியுள்ளார். மேலும், தங்களது பணத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்குமாறும் சுப்புசாமி புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் முதல் கட்ட விசாரணையை தொடங்கி வேலை வாய்ப்பு மோசடி மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில்வேதுறை பதில்
டெல்லி ரயில்வே துறையின் பெயரை பயன்படுத்தி நடந்த வேலை வாய்ப்பு மோசடி தொடர்பாக பிடிஐ செய்தி முகமையிடம் பேசிய, ரயில்வே அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் யோகேஷ் பவேஜா, ரயில்வே துறைக்கான பணியிடங்கள் அனைத்தும் அந்த துறையின் தேர்வு வாரியம் மூலமாக நடத்தப்படுவதாகவும் வேலைவாய்ப்பு தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டால் இளைஞர்கள் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார்.