30 ஆண்டுகளுக்கு முன் இந்திய தலைநகர் டெல்லியில் விஞ்ஞானி ஒருவர் தன் மனைவியுடனான வாக்குவாதத்தில் அவரை கொன்று, உடலை பல துண்டுகளாக்கி பெட்டி ஒன்றில் அடைத்தார்.
அதன்பின், அவர் அந்த பெட்டியுடன் ரயிலில் பயணிகள் நெரிசலுடன் 1,500 கி.மீக்கும் அதிகமாக பயணித்து தெற்கு நகரமான ஐதராபாத்திற்கு சென்று, அங்கு சதுப்பு நிலம் அருகே அமைந்திருந்த ஹோட்டலில் தங்கினார்.
அடுத்த சில தினங்களில், மனைவியின் உடல் பாகங்களை அந்த சேறு நிறைந்த ஏரியில் அப்புறப்படுத்தினார். ஒருநாள், உணவுக்காக அந்த பகுதியில் அலைந்துகொண்டிருந்த நாய் ஒன்று, சதுப்பு நிலத்திலிருந்து 'மனித கை' ஒன்றை வெளியில் எடுத்தது.
“கொலை செய்ததற்கான ஆதாரங்களை அழிப்பதற்காக அவர் சடலத்தை பல துண்டுகளாக சிதைத்து அவற்றை வேறு நகரத்திற்கு எடுத்துச் சென்று அப்புறப்படுத்தியுள்ளார். இப்படி கொலை செய்து பின்னர் உடல் உறுப்புகளை துண்டுகளாக்கி அப்புறப்படுத்துவது புதிதல்ல.
ஆனால், இப்படி உடல் பாகங்களை பல துண்டுகளாக்கி அப்புறப்படுத்தும் முறை புத்தகம் அல்லது திரைப்படங்களால் ஈர்க்கப்பட்டதால் நிகழ்கிறதா என நாங்கள் ஆச்சர்யப்பட்டோம்,” என டெல்லி காவல்துறையை சேர்ந்த மூத்த அதிகாரி தீபேந்திர பதக் நினைவுகூர்கிறார்.
சமீப மாதங்களாக இந்தியாவில் இத்தகைய ஒரே மாதிரியான கொலைகள் (copycat murders) பல தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளன.
ஒவ்வொரு வழக்கிலும், கொலை செய்யப்பட்ட நபரின் உடல் பாகங்கள் பல துண்டுகளாக்கப்பட்டு அவை குளிர்சாதனப் பெட்டியிலோ அல்லது சூட்கேஸிலோ அடைக்கப்படுகின்றன. அதன்பின், அந்த உடல் பாகங்கள், காலியான பரந்த நிலத்திலோ அல்லது வெறிச்சோடிய சாலையிலோ அல்லது காட்டுப்பகுதியிலோ அப்புறப்படுத்தப்படுகின்றன.
இந்தியாவில் உள்ள குற்றத்தரவுகள் இத்தகைய கொலைகள் குறித்த எந்த தடயங்களையும் வழங்கவில்லை. இந்தியாவில் 2021ம் ஆண்டில் 29,000 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது 2020ம் ஆண்டைவிட 0.3% அதிகம். இவற்றில் பல கொலைகள் “தகராறு”, “தனிப்பட்ட பழிவாங்கல்” அல்லது “(பண) ஆதாயத்திற்காக” நிகழ்த்தப்பட்டவையாகும்.
இவற்றில் கொலை செய்யப்பட்ட எத்தனை பேரின் உடல் பாகங்கள் துண்டுகளாக்கப்பட்டன அல்லது கொலை செய்வதற்கு என்ன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து நமக்குத் தெரியவில்லை.
“ஒரு கொலையை பிரதியெடுத்தாற்போன்று மற்றொரு கொலையை செய்வது நிகழ்கிறது. கொலைகளை பிரதியெடுக்கும் நடத்தையை ஊடகங்கள் பரப்புகின்றன,” என குற்றங்களை ஊடகங்கள் வெளியிடும் முறை குறித்து ஆய்வு செய்தவரும் கலாசார நடத்தை குறித்த ஆய்வாளருமான லோரென் கோல்மேன் எழுதுகிறார்.
கடந்த நவம்பர் மாதத்தில் தன் பார்ட்னர் ஷ்ரத்தா வால்கரை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட அஃப்தாப் பூனாவாலா, டெக்ஸ்டர் எனும் அமெரிக்க தொடரால் ஈர்க்கப்பட்டதாக தெரிகிறது. இந்த தொடரில், தடயவியல் நிபுணர் ஒருவர் சீரியல் கொலையாளியாகவும் இருப்பார்.
பூனாவாலா ஷ்ரத்தாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து அவரது உடலை 36 துண்டுகளாக்கி அதனை குளிர் சாதன பெட்டியில் வைத்து பின்னர் அவற்றை வீட்டுக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் கொட்டியுள்ளார் என காவல்துறையினர் கூறுகின்றனர்.
“அத்தகைய கொலைகளை பரபரப்பாக்குவது மக்களை மிகை உணர்ச்சி கொண்டவர்களாக்கும், அதேபோன்று கொலைகளை நகலெடுப்பதற்கும் ஊக்கமளிக்கும்,” என்கிறார் குற்றவியல் உளவியலாளர் அனுஜா கபூர்.
ஆயினும்கூட, பரபரப்புகளை விரும்பும் ஊடகங்கள் விவரிப்பது போன்று இந்தியாவின் "ஃப்ரிட்ஜ்" மற்றும் "சூட்கேஸ்" கொலைகளை ‘நகல் குற்றங்கள்’ என நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை என குற்றங்களை விசாரிப்பவர்களும் குற்றவியல் உளவியலாளர்களும் கூறுகிறார்கள்.
“ஒரு குற்றத்தைப் போன்றே வேறொரு நகல் குற்றங்கள் நடக்கின்றன. ஆனால், என்னுடைய அனுபவத்திலிருந்து ஆதாரங்களை அழிப்பதற்கு கொலையாளிகள் தேர்ந்தெடுக்கும் முறைகள் திரைப்படங்களிலிருந்தோ அல்லது நாவல்களிலிருந்தோதான் அதிகம் எடுக்கப்படுகின்றன. மாறாக அதேபோன்ற குற்றங்களிலிருந்து நகலெடுக்கப்படுவதில்லை,” என்கிறார் பதக்.
கொலை செய்தபின் உடலின் பாகங்களை துண்டுகளாக்கி அழிப்பது பழமையானது மற்றும் வழக்கமான ஒன்றே. கெட்ட செய்திகள் மீதான ஊடகங்களின் சார்பு நிலை மற்றும் பரபரப்பான கொலைகளுக்கு மிகையான கவனத்தையும் நேரத்தையும் அளிப்பது, இதேபோன்ற குற்றங்கள், கொலைகள் அடிக்கடி நடக்கின்றன என்ற தோற்றத்தை உருவாக்குகிறது.
“சடலத்தை துண்டுகளாக்கி ஆதாரங்களை அழிப்பது ஒப்பீட்டளவில் அரிதானது, ஆனால் எல்லா சமயங்களிலும் நடந்துகொண்டு தான் இருக்கின்றது. ஆனால், அவற்றில் பல வழக்குகள் ஊடகங்களால் வருவதில்லை. ஊடகங்களில் வராத இதேபோன்ற மூன்று கொலைகள் குறித்து நான் ஆய்வு செய்து வருகிறேன்,” என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் மருத்துவத்துறையின் தலைவர் சுதிர் கே. குப்தா கூறுகிறார்.
மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் இந்தியாவில் தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணராக டாக்டர் குப்தா தனது வாழ்க்கையைத் தொடங்கியபோது, பாதிக்கப்பட்டவர்களை அவர்களது வீடுகளை விட்டு வெளியே வரவழைத்து, வெறிச்சோடிய பகுதிகளில் கொலை செய்து, அவர்களின் சடலங்கள் காட்டில் வீசப்பட்ட நிகழ்வுகளை கண்டுள்ளார்.
நகரமயமாக்கல் பெருகிவரும் நாட்டில் பல குடும்பங்கள் தனி குடும்பங்களாகிவிட்டன. இதனால் பல கொலைகள் ஆட்கள் அதிகம் இல்லாத வீடுகளில் நடக்கின்றன. சில நிகழ்வுகளில் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் துண்டுகளாக்கப்பட்டு அகற்றப்படுகின்றன.
“இத்தகைய கொலைகளில் சடலங்களின் உடல்பாகங்கள் துண்டுகளாக்கப்படும்போது, தடயவியல் மறுசீரமைப்பு மற்றும் பாதிக்கப்பட்டவரை அடையாளம் காண்பது ஒரு சவாலாக மாறும்,” என்கிறார் டாக்டர் குப்தா.
"ஆனால் மனித எலும்புகளை விரிவாக ஆய்வு செய்வது பாலினம், வயது, இறந்த தேதி மற்றும் இறப்புக்கான சாத்தியமான நிகழ்வு ஆகியவற்றைக் கூறலாம்," என்கிறார் அவர்.
என்ன காரணம்?
இத்தகைய கொலைகள் குறித்த சில தடயங்களை சர்வதேச ஆய்வுகள் வழங்குகின்றன.
பின்லாந்தில் 10 ஆண்டுகள் நீடித்த வழக்குகளின் மாதிரியிலிருந்து 13 வழக்குகளை ஆய்வு செய்ததில், பாதிக்கப்பட்டவர்களில் யாரும் குற்றவாளிகளுக்கு அந்நியர்கள் இல்லை என்றும், கிட்டத்தட்ட பாதி பேர் கொலை செய்யப்பட்டவர்களின் இணையர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் என்றும் கண்டறியப்பட்டது. கொலை செய்யப்பட்ட நேரத்தில், பெரும்பாலான குற்றவாளிகள் வேலையில்லாமல் இருந்தனர், மேலும் யாரும் மனித உடல்கள் அல்லது சடலங்களைக் கையாள்வது பற்றிய அறிவு தேவைப்படும் எந்தத் தொழிலிலும் இல்லை.
போலந்தின் கிராகோவில் உள்ள தடயவியல் மருத்துவத் துறையின் அரை நூற்றாண்டுக்கும் மேலாக, துண்டிக்கப்பட்ட உடல்கள் தொடர்பான 30 கொலை வழக்குகள் பற்றிய மற்றொரு ஆய்வில், இந்தக் கொலைகள் பொதுவாக திட்டமிடப்பட்டவை அல்ல என்றும், "பாதிக்கப்பட்ட (குடும்பம் அல்லது நண்பர்) உடன் நெருங்கிய உறவில் இருந்த குற்றவாளிகளால் செய்யப்பட்டவை" என்றும் கண்டறியப்பட்டது.
கொலை நடந்த அதே இடத்தில் குற்றவாளியின் வீடும் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. போஸ்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் மேற்கொண்ட ஆய்வில், உடல் பாகங்கள் துண்டிக்கப்பட்ட 76% குற்றங்கள் ஆண்களால் செய்யப்படுகின்றன என தெரியவந்துள்ளது.
இந்தியாவில் இத்தகைய கொலைகளின் முறைகள் பற்றி மிகக் குறைவாகவே அறியப்பட்டுள்ளது. எத்தனை பேர் கொலை செய்த பின் தானாகவே காவல்துறையிடம் சரணடைகின்றனர் என்பதும் எத்தனை பேர் சடலத்தை சிதைத்து ஆதாரங்களை மறைக்க முயல்கிறார்கள் என்பதும் தெரியவில்லை.
“ஆனால், இந்தக் கொலைகள் பல இந்தியாவில் பிரச்னைக்குரிய திருமணங்கள், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள், திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்வது உள்ளிட்ட நவீன கால சமூக உறவுகளில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்துகின்றன” என்கிறார் பதக்.
"சில சமயங்களில் கட்டுப்பாடுகளை இழக்கும்போது இத்தகைய கொலைகள் நடக்கின்றன” என்கிறார் அவர்.