பீஹாரில் சட்டவிரோத மதுபானம் அருந்திய 37 பேர் பலி
18 Dec,2022
இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் சட்டவிரோத மதுபானம் அருந்திய 37 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 வரை இருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.
பீஹாரில் மதுபான விற்பனைக்கும் நுகர்வுக்கும் 2016 ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சட்டவிரோத மதுபானத்தை கடந்த திங்கட்கிழமை திருமண வைபவங்கள் மற்றும் வேறு நிகழ்வுகளின்போது அருந்தியதாகக் கூறப்படும் பலர் கடந்த சில நாட்களில் உயிரிழந்துள்ளனர். சரண், சிவான், பேகுசராய் முதலான மாவட்டங்களில் இம்ரணங்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த வியாழக்கிழமை 20 பேர் இறந்தனர் எனவும், நேற்று சனிக்கிழமை மேலும் சுமார் ஒரு டசன் பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தனர் எனவும், பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுவரை குறைந்தபட்சம் 37 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் கூறினார். 71 பேர் உயிரிழந்ததாக வெளியான செய்திகளை அவரால் உறுதிப்படுத்த முடியவில்லை.
சட்டவிரோத மதுபானத் தயாரிப்பு, விற்பனை தொடர்பில் கடந்த 3 தினங்களில் நூற்றுக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் 600 லீற்றர் மதுபானம் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.