எங்களிடம் அணு குண்டு உள்ளது என்பதை இந்தியா மறந்துவிட வேண்டாம் - பாகிஸ்தான்
18 Dec,2022
எங்களிடம் அணு குண்டு உள்ளது என்பதை இந்தியா மறந்துவிட வேண்டாம் என்று பாகிஸ்தான் மந்திரி தெரிவித்துள்ளார். லாகூர், அமெரிக்காவில் நடந்த ஐ.நா. சபையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரி, காஷ்மீர் தொடர்பாக ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்தியா நிறைவேற்ற வேண்டும
என்று கூறினார். அவருக்கு அவையில் பதிலடி கொடுத்த இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், ஒசாமா பின்லேடனுக்கு உறைவிடம் கொடுதவர்கள், அண்டை நாட்டு நாடாளுமன்றத்தை தாக்கியவர்கள் நம்பகத்தன்மை குறித்து இந்த சபையில் பிரசாரம் செய்ய வேண்டாம்' என்றார். இந்த கூட்டத்தொடர் முடிந்த பின்னரும் இந்திய - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரிகளின் கருத்துக்கள் பேசுபொருளானது. இதனை தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரின் கருத்துக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பூட்டோ, 'ஒசாமா பின்லேடன் இறந்துவிட்டார். ஆனால், குஜராத் கசாப்புக்கடைக்காரர் வாழ்கிறார். அவர் இந்தியாவின் பிரதமராக (மோடி) உள்ளார். அவர் (பிரதமர் மோடி) இந்த நாட்டிற்குள் (அமெரிக்கா) நுழைய தடைவிதிக்கப்பட்டது.
பிரதமரும் (மோடி), வெளியுறவுத்துறை மந்திரியும் (ஜெய்சங்கர்) ஹிட்லரின் நாசி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள்' என்றார். பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, விரக்தியின் விளிம்பில் இருந்துகொண்டு பிலாவல் பூட்டோ சர்தாரி பேசி இருக்கிறார். பயங்கரவாதத்தை தனது அரசின் கொள்கையாகக் கொண்டிருக்கும் நாட்டைச்
சேர்ந்த அவரின் பேச்சு, பயங்கரவாதிகளுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும்.பிலாவல் பூட்டோ சர்தாரியின் நாகரிகமற்ற பேச்சு, அந்த நாட்டுக்கு மேலும் ஒரு தாழ்வு' என்று பதிலடி கொடுத்தது. அதேவேளை, பிரதமர் மோடி குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்த கருத்துக்கு இந்தியாவில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. பாகிஸ்தான் கொடியை எதிர்த்து பாஜகவினர் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், எங்களிடம் அணு குண்டு உள்ளது என்பதை இந்தியா மறந்துவிட வேண்டாம் என்று பாகிஸ்தான் மந்திரி மிரட்டல் விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சி மந்திரி ஷஷியா மரி லாகூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு தெரியும். பாகிஸ்தானிடம் அணு குண்டு உள்ளது என்பதை இந்தியா மறந்துவிடக்கூடாது. எங்கள் அணு ஆயுத நிலைப்பாடு அமைதியாக இருப்பதற்கு அல்ல. தேவை ஏற்பட்டால் நாங்கள் பின்வாங்கப்போவதில்லை. தாக்கப்படும்போது பாகிஸ்தான் அமர்ந்திருக்காது. சமபலத்துடன் பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும். இஸ்லாமிய மதத்தினரை பயங்கரவாதத்துடன் இந்தியா தொடர்புபடுத்துகிறது' என்றார்.